சாங்கி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிதியில் கூடுதலாக $5 பில்லியன் நிரப்பப்படும் என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறினார்.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5க்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்றார் அவர்.
முனையம் 5 தயாரானதும் விமான நிலையத்தின் ஆற்றல் 50 விழுக்காட்டுக்கும் அதிகம் விரிவடையும் என்று தெரிவித்த திரு வோங், உலகளாவிய பயணம், வர்த்தகத்துக்குச் சிங்கப்பூர் தொடர்ந்து முக்கிய நுழைவாயிலாக இருப்பதை இது உறுதி செய்யும் எனக் குறிப்பிட்டார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் இசைவுடன் சாங்கி விமான நிலையக் குழுமத்துக்கு உத்தரவாதம் அளிப்பவராக அரசாங்கம் செயல்படும்.
இதன்மூலம் முனையம் 5, சாங்கி ஈஸ்ட்டில் அமையவிருக்கும் துணை உள்கட்டமைப்பையும் கட்ட வாங்கப்படும் கடன் தொடர்பான செலவுகளைக் குறைக்க முடியும் என்றார் பிரதமர் வோங்.
1,080 ஹெக்டர் பரப்பளவில், புதிய சாங்கி ஈஸ்ட் நிலப்பகுதியில் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5 கட்டப்படும்.
இதுவே சாங்கி விமான நிலையத்தின் ஆகப் பெரிய விரிவாக்கத் திட்டமாகும்.
முனையம் 5ன் பரப்பளவு மரினா பேயின் பரப்பளவைவிட மும்மடங்கு பெரிது.
தொடர்புடைய செய்திகள்
முனையம் 5க்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கும் என்று 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் வோங் தெரிவித்திருந்தார்.
அது 2030ஆம் ஆண்டுக்கும் 2040ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் (நடுப்பகுதியில்) திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு அதிகபட்சம் 50 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலை முனையம் 5 கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் அதன் வளர்ச்சித் திறனின் உச்சத்தை எட்ட, உலகத் தரம்வாய்ந்த உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றார் பிரதமர் வோங்.
வளங்கள் பற்றாக்குறையை முறியடிக்க புத்தாக்கமிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் கூறினார்.
பொருளியல் நடுவமாகச் சிங்கப்பூர் திகழ்வதாகக் கூறிய பிரதமர் வோங், இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள மற்ற நாடுகளுடன் உயர்தர இணைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
நேரடி இணைப்பும், மின்னிலக்க இணைப்பும் இதில் அடங்கும்.
துவாஸ் துறைமுகத்துக்கான மேம்பாட்டுப் பணிகள் திட்டமிட்டப்படி நன்கு நடந்தேறி வருவதாக திரு வோங் கூறினார்.
கப்பல்கள் வருகை அடிப்படையில் சிங்கப்பூர் கடந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியது.
உலகளாவிய நிலையில் முன்னணி கடல்துறை நடுவமாகத் தொடர இது வகை செய்வதாக திரு வோங் தெரிவித்தார்.
மேலும், தீவெங்கும் 5ஜி கட்டமைப்பு வசதி இருப்பதைத் திரு வோங் சுட்டினார்.
இணைய சேவை வேகத்தை பத்து மடங்கு அதிகரிக்க, நாடு தழுவிய இணையக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் வர்த்தகங்களுக்கும் தனிநபர்களுக்கும் தேவையான மின்னிலக்க இணைப்பு மேம்படும் என்றார் அவர்.

