பருவநிலை அபாயங்களுக்கு எதிராக சிங்கப்பூர் தன்னைத் தற்காத்துக்கொள்ள கடலோர, வெள்ளப் பாதுகாப்பு நிதிக்குக் கூடுதலாக $5 பில்லியன் நிதித்தொகை ஒதுக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார்.
“எதிர்காலத்தில் கடலோர, வெள்ளப் பாதுகாப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடுகளை உறுதிப்படுத்த இப்போதே நிதியை ஒதுக்குவது சிறந்த முயற்சி,” என்று பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்த வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரைக் கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்கவும் வெள்ளத்துக்கு எதிராகத் தாக்குப்பிடிக்கும் திறனை அதிகரிக்கவும் 2020ஆம் ஆண்டில் கடலோர, வெள்ளப் பாதுகாப்பு நிதி தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் தனது கரிப்பொருள் உமிழ்வைக் குறைக்க முயற்சித்தாலும், காலநிலை அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வோங் கூறினார்.
புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான நடவடிக்கைகளை உலகம் தொடர்ந்தால், உலக வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதனால், 2100ஆம் ஆண்டுக்குள் சராசரியாகக் கடல் மட்டம் 1 மீட்டருக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக சராசரி கடல் மட்டம் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், சிங்கப்பூரின் மூன்றில் ஒரு பகுதி கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று தெரியவந்தது.
தாழ்வான பகுதிகளில் கடலோர வெள்ளத்தையும் ஏற்படுத்தலாம்.
சிங்கப்பூர் தனது கடற்கரையோரங்களைப் பாதுகாக்க நிலையான கட்டமைப்புகளுடன் எதிர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் மறுசீரமைப்புக்குப் பல தீர்வுகளைப் பயன்படுத்தும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
“சிங்கப்பூரில் கரிம வெளியீட்டைக் குறைப்பதுடன் தட்பவெப்ப நிலைத்தன்மையை மேம்படுத்த அடுத்த பத்தாண்டுகள் மிக முக்கியமானவை. பெருங்கடல்கள் உயரும்போதும் சிங்கப்பூரின் பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வோம்,” என்றார்.


