தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க 2025ல் கூடுதல் உதவி: மூத்த அமைச்சர் லீ

2 mins read
455a4d73-feda-4942-bca0-9b3b07671bdf
டெக் கீ தொடக்கப் பள்ளியில் எடுசேவ் விருதுகளை வழங்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரர்களுக்கு வாழ்க்கைச் செலவினம் ஒரு பிரச்சினையாக உள்ளது.

இதைச் சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஒருவரும் பின்தங்கிய நிலை ஏற்படாது எனவும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சனிக்கிழமை (ஜனவரி 18) தெளிவுபடுத்தினார்.

பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யும்போது இவ்வாண்டு கூடுதல் உதவி குறித்து அறிவிக்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் கோடிகாட்டினார்.

“பிரதமர் லாரன்ஸ் வோங் நல்ல தகவல் வரும் என ஏற்கெனவே கூறியுள்ளார்,” என்பதை திரு லீ நினைவுகூர்ந்தார். திரு லீ, டெக் கீ தொடக்கப் பள்ளியில் எடுசேவ் விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

சிங்கப்பூர் பொருளியல் 2024ஆம் ஆண்டு நன்றாக இருந்ததாகக் கூறிய திரு லீ, கொவிட்-19 கொள்ளைநோய் காலத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளதாக சொன்னார். எனினும், அதுபற்றிய கவலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.

“வாழ்க்கைச் செலவினம், அத்துடன் வேலை நீடிப்பது போன்றவற்றை நினைத்து சிங்கப்பூரர்கள் ஒருவிதப் பதற்றத்தில் இருக்கின்றனர்,” என்று கூறிய மூத்த அமைச்சர் லீ, பொருளியலில் மாற்றங்கள் வந்தால் தங்கள் குடும்பத்தாரை கட்டிக்காப்பது பற்றி அவர்கள் கவலையுறுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய திரு லீ, தமது அரசாங்கம் இதுவரை செய்த உதவியை நினைவுகூர்ந்தார். சமூக மேம்பாட்டு மன்றம் வாயிலாக 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்ட $800 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் அத்துடன் இவ்வாண்டு ஜனவரியில் வழங்கப்பட்ட மேலும் $300 ஆகியவற்றைக் குறிப்பிட்டாார். மேலும், பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகள், யுசேவ் பொதுப் பயனீட்டுக் கழிவுகள், இவற்றுடன் வசதி குறைந்தோருக்கு வழங்கப்பட்ட ரொக்கம் ஆகியவற்றையும் அவர் எடுத்துக் கூறினார்.

இவற்றுடன், அந்தந்த தொகுகளிலும் உதவி வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு உதாரணமாக, தமது டெக் கீ தொகுதியை சுட்டிய திரு லீ, வசதி தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவி நிதி, இலவச துணைப் பாட வகுப்புகள், வாசிப்பு நிகழ்வுகள், உணவுப் பற்றுச்சீட்டுகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கீடு போன்றவற்றை அவர் நினைவுபடுத்தினார்.

அத்துடன், சமூக நன்கொடையாளர்கள் திரட்டிய அண்மையில் வழங்கப்பட்ட பராமரிப்பு உதவித் தொகுப்பு, ஹொங் பாவ் ரொக்கம் போன்றவற்றையும் திரு லீ சுட்டினார்.

“இவை யாவும் அனைவரும் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க உதவுவது மட்டுமல்லாமல் எவரும் பின்தங்கும் நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்