மனவளர்ச்சி குன்றியோர் அல்லது தொடர்புத்திறன் குறைபாடு உள்ளவர்களைப் பராமரிப்போர், அடுத்த ஆண்டிலிருந்து கூடுதல் நிதியுதவியை எதிர்பார்க்கலாம். சில திட்டங்களுக்கான தகுதி வரம்புகள் விரிவாக்கப்படுவதைத் தொடர்ந்து அது சாத்தியமாகவுள்ளது.
வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான தீர்வை வழக்கமான $300யிலிருந்து $60ஆகக் குறைக்கப்பட்டதும் இல்லப் பராமரிப்பு மானியம் வழங்கப்படுவதும் ஆதரவில் அடங்கும். பராமரிப்புச் செலவைச் சமாளிக்க மாதத்திற்கு $600 வரை அந்த மானியத்தின்கீழ் வழங்கப்படும்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற இல்லத் தாதிமை அறநிறுவனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவுப் பராமரிப்பு மாநாட்டில், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்த மாற்றங்களை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் வரவிருக்கும் பராமரிப்பாளர்களுக்கான மற்ற ஆதரவுத் திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
தற்போது, உணவு உட்கொள்வது, உடை அணிவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் மூன்றிலாவது உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமே, நிபுணர்களின் மதிப்பீட்டிற்குப் பிறகு இல்லப் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது.
இருப்பினும், மனவளர்ச்சி குன்றியோர் அல்லது தொடர்புத்திறன் குறைபாடு உள்ள சிலருக்கு அதிகப் பராமரிப்பு தேவைகள் இருந்தபோதிலும் அவர்களால் பராமரிப்பு மானியத்தைப் பெறமுடியாமல் போகக்கூடும் என்று திரு. ஓங் கூறினார்.
அவர்களால் அன்றாட நடவடிக்கைகளைத் தாங்களாகவே செய்ய முடிந்தாலும், அன்றாட நடவடிக்கை மதிப்பீட்டில் பிரதிபலிக்காத பராமரிப்புத் தேவைகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். விரிவாக்கப்பட்ட புதிய தகுதி வரம்புகள் இந்தக் குழுவினரின் பராமரிப்புத் தேவைகளையும் உள்ளடக்கும்.
இந்த மாற்றம் நான்கு நிதி உதவித் திட்டங்களுக்குப் பொருந்தும். இல்லப் பராமரிப்பு மானியம்; உடற்குறையுள்ளோருக்கான வெளிநாட்டுப் பணிப்பெண் தீர்வைச் சலுகை; பராமரிப்பாளர் பயிற்சி மானியம்; உடற்குறையுள்ள முன்னோடித் தலைமுறையினர் உதவித் திட்டம் ஆகியவையே அவை.
பராமரிப்பாளர்கள் அமைதியாகப் பின்னணியில் உழைத்து, மிக முக்கியப் பங்காற்றினாலும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறார்கள் என்று திரு. ஓங் குறிப்பிட்டார். அவர்களின் உடல், மன ரீதியான சுமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது அவசியம் என்றும் அரசாங்கம் சில நடைமுறை வழிகளில் அந்த ஆதரவை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.


