தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவி

2 mins read
eca1aba0-ce12-4477-b9af-6cc14ea7f3ac
எச்எஸ்ஏ-எஸ்எம்எஃப் பங்காளித்துவத்தின்கீழ் நிறுவனங்கள் ஆலோசனைச் சேவைகளையும் நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் மருத்துவத் தொழில்நுட்பத் துறைக்குக் கூடுதல் உதவி கிடைக்கவிருக்கிறது.

நிறுவனங்கள் புத்தாக்க நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை மேலும் சிறந்த முறையில் பின்பற்ற புதிய பங்காளித்துவம் கைகொடுக்கும். இங்கும் ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் இயங்குகின்ற நிறுவனங்களுக்கு அது பொருந்தும்.

சிங்கப்பூர் அறிவியல் ஆணையமும் சிங்கப்பூர் உற்பத்தி நிறுவனங்கள் சம்மேளனத்தின் மருத்துவத் தொழில்நுட்பத் துறைக் குழுமமும் அந்தப் பங்காளித்துவத்தில் இணைந்துள்ளன. அதன்கீழ் நிறுவனங்கள் ஆலோசனைச் சேவைகளையும் நிபுணத்துவ வளர்ச்சித் திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய பங்காளித்துவம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.

பொருள்களை உருவாக்குவதில் நிறுவனங்கள் ஆரம்பக் கட்டங்களில் இருக்கும்போது சந்தைக்குள் நுழைய ஆலோசனைச் சேவைகளைப் பெறலாம். சம்மேளனத்தின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான (எஸ்எம்இ) நிலையத்தில் அந்தச் சேவைகளை நாடலாம்.

கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறுவனங்கள் மேலும் திறம்பட்ட முறையில் பின்பற்றுவதற்கு உதவும் வகையில் சிறப்பு நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டங்களும் வழங்கப்படும்.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் வல்லுநர்களும் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவர். கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கு என்னென்ன தேவை என்பதையும் ஆகச் சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் பகிர்ந்துகொள்வர்.

“கட்டுப்பாட்டு அமைப்புக்கும் தொழில்துறைச் சங்கத்துக்கும் இடையில் அணுக்கமான உறவு இருப்பது அவசியம். வெகு விரைவாக உருமாறிவரும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்பத் துடிப்போடு செயல்படவும் விதிமுறைகள் காலத்திற்கேற்றவாறு இருப்பதை உறுதிசெய்யவும் அது முக்கியம்,” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி ரேமண்ட் சுவா தெரிவித்தார்.

“நோயாளியின் பாதுகாப்புக்கான கடப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் அதே நேரத்தில், புதிய தொழில்நுட்பங்களுக்கான கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளை இணைந்து வகுப்பதற்கு இது உதவியாக இருக்கும்,” என்றார் அவர்.

“ஆணையமும் சம்மேளனமும் ஒருங்கிணைந்த அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. கட்டுப்பாட்டு நடைமுறைகள், மதிநுட்பச் சொத்துகளைப் பாதுகாப்பதற்குரிய வலுவான கட்டமைப்பு, அத்தியாவசிய வர்த்தகத் தொடர்புச் சேவைகள் ஆகிய அனைத்தும் அதில் தடையின்றி இணைக்கப்பட்டுள்ளன,” என்று மருத்துவத் தொழில்நுட்பத் துறைக் குழுமத்தின் தலைவர் யூஜின் யூ கூறினார்.

“சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடவும் உற்பத்தியைப் பெருக்கவும் சொத்துகளைப் பாதுகாக்கவும் இது கைகொடுக்கும். உலகச் சந்தைகளை அணுகுவதற்கு இது வலுவான ஆதரவாக அமையும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்