சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான பள்ளிகள் (Special education (SPED) schools) இவ்வாண்டுமுதல் 2030களின் முற்பகுதிவரை விரிவுபடுத்தப்படும்.
இந்தப் புதிய முயற்சியை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி அறிமுகப்படுத்தினார்.
இந்த விரிவாக்கம் மூன்று பிரிவுகளில் நடைபெறும்.
மைண்ட்ஸ் ஃபெர்ன்வேல் கார்டன்ஸ் பள்ளி, லீ கொங் சியான் கார்டன்ஸ் பள்ளி, டவுனர் கார்டன்ஸ் பள்ளி ஆகியவை மூன்று கூடுதல் வளாகங்களுடன் விரிவுபடுத்தப்படும்.
மைண்ட்ஸ் உட்லண்ட்ஸ் கார்டன்ஸ் பள்ளி ஒரு பெரிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படும்.
ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கென மூன்று புதிய சிறப்புப் பள்ளிகள் நிறுவப்படும்.
2030களில் அரசாங்கம் மற்றும் சமூக நிதியுதவி பெறும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை தற்போதைய 26லிருந்து 30ஆக உயர்த்தப்படும்.
இது சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி வசதியை எளிதாக்கும் என்று தெரிவித்தார் திரு அல்ஹப்ஷி.
தொடர்புடைய செய்திகள்
அண்மை ஆண்டுகளில் சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பள்ளிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் அதற்கு ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணம் என்றும் மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா சுட்டிக்காட்டியதை மீண்டும் தமது உரையின்போது திரு அல்ஹப்ஷி நினைவுகூர்ந்தார்.
“அத்தகைய மாணவர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்க சமூக சேவை நிறுவனங்களுடன் அமைச்சு இணைந்து பணியாற்றவுள்ளது,” என்றார் அவர்.
2030களின் முற்பகுதியில் கிட்டத்தட்ட 30% கூடுதல் மாணவர்கள் ஆதரவு பெறுவர் என்றும் திரு அல்ஹப்ஷி உறுதியளித்தார்.

