தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளுக்கு கூடுதல் ரொக்க போனஸ், முழுமையான மத்திய சேமநிதிப் பங்களிப்பு

2 mins read
a08117db-66a3-488f-a20c-00e6a979b618
புதிய அதிகாரிகளின் சேமிப்புத் திட்டத்தின்கீழ் அவர்களுக்குக் கூடுதல் தொகை கிடைக்கும் என்று செப்டம்பர் 6ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுமையான மத்திய சேமநிதி பங்களிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளுக்கான சேமிப்பு, ஓய்வுக்காலத் திட்டங்கள் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து மாற்றம் காண்கின்றன.

இந்த மாற்றங்களின் மூலம் அவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

புதிய அதிகாரிகளின் சேமிப்புத் திட்டத்தின்கீழ் அவர்களுக்குக் கூடுதல் தொகை கிடைக்கும் என்று செப்டம்பர் 6ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை சராசரியாக 40 விழுக்காடு அதிகரிக்கும்.

சேமிப்பு, ஊழியர் ஓய்வுத் திட்டத்தில் மூன்று மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட அதிகாரிகளுக்கு ரொக்க போனஸ் தரப்படும்.

திருமணம், வீடு வாங்குவது போன்றவற்றில் அவர்களுக்கு உதவ இத்தொகை வழங்கப்படுகிறது.

தற்போது அதிகாரிகளின் முதல் பத்தாண்டு சேவையின்போது அவர்களது சேமிப்புக் கணக்கில் பணம் போடப்படுகிறது.

இப்பணத்தை அவர்கள் சேவையில் இணைந்து ஏழு ஆண்டுகள் ஆன பிறகே வெளியே எடுக்கலாம்.

புதிய அணுகுமுறையின்கீழ் சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளுக்கு முழுமையான மத்திய சேமநிதி பங்களிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர்களால் பணியில் சேர்ந்து சில ஆண்டுகளிலேயே அதில் கூடுதல் தொகையைப் பெற முடியும்.

அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளின் ஓய்வுக்காலக் கணக்கிற்குக் கூடுதல் பங்களிப்பு வழங்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

அவர்கள் பணியில் சேரும் முதல் ஆண்டிலிருந்தே இத்தொகை வழங்கப்படும்.

“இந்த மாற்றங்கள் சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளின் தேவைகளை மேலும் சிறப்பான முறையில் பூர்த்தி செய்யும். அத்துடன் அவர்களது ஓய்வுக்கால நிதிநிலையை மேம்படுத்தும்,” என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்