ஹோலி ஸிபிரிட் (Holy Spirit) தேவாலயத்தின் போதகர் உட்பட 12 பேரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) கூடுதலாக ஒரு குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.
சிட்டி ஹாலில் உள்ள செயிண்ட் ஆண்ட்ருஸ் தேவாலயத்தில் 23 வயது ஹுவாங் குவாங் செங், 2023 அக்டோபர் 25ஆம் தேதி, ஆடவர் ஒருவரை வேண்டுமென்றே தாக்கிய குற்றத்தை எதிர்கொள்கிறார்.
ஆடவரின் தலைக்குப் பின் ஊன்றுகோலைக் கொண்டு ஹுவாங் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன், ஆகஸ்ட் மாதத்தில் ஹோலி ஸிபிரிட் (Holy Spirit) தேவாலயத்தின் போதகர் கேரி சானை வேண்டுமென்றே தாக்கியதாக ஹுவாங்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அப்பர் தாம்சன் சாலையில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் போதகர் சானை ஹுவாங் முகத்தில் அடித்தார்.
சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களிடம் அப்போது பேசிய போதகர் சான், ஹுவாங்கிற்குப் பார்வை குறைபாடும் சிறப்புத் தேவைகளும் இருக்கிறது என்று கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 21 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஹுவாங்மீது தற்போது மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்திற்கு வந்த ஹுவாங்கின் தாயார், ஒவ்வொரு முறையும் ஹுவாங் நீதிமன்றம் வரும்போது அதிக பதற்றத்திற்குள்ளாவதுடன் மீண்டும் கைதாவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது என்று மாவட்ட நீதிபதி ஜெனட் வாங்கிடம் கூறினார்.
அதைப் புரிந்துகொள்வதாக நீதிபதி தலை அசைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஹுவாங் தொடர்ந்து நீதிமன்றத்தில் கூச்சலிட்டதற்கும் அவரின் தாயார் நீதிபதியிடன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
ஹுவாங்கின் வழக்கு மீண்டும் நவம்பர் 10ஆம் தேதி விசாரிக்கப்படும்.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஹுவாங் பெருவிரைவு ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் அடுத்தவர்களுக்குக் காயம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது.