மின்சிகரெட்டுக்கு எதிரான நடவடிக்கைகளைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை சிங்கப்பூரின் நிலம், கடல், வான்வழி சோதனைச்சாவடிகளில் கூடுதலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த ஐந்து நாள்கள் சோதனைகளில் 184 சம்பவங்களில் 850க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளுக்கும் அவை தொடர்பான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே சமயத்தில், 2,400க்கும் மேற்பட்ட புகையிலை பேக்கெட்டுகளும், வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகள் கொண்டிருந்த 53,000க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளும் 3,900 பேக்கேட்டுகளும் பறிமுதல் செய்யப்ப்பட்டன. பெரும்பாலான சமயங்களில் லாரி, கார், சரக்கு அல்லது வான் இறக்குமதிகளில் அவை மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
ஆகஸ்ட் 22ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியிலும் சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்திலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தமிழ் முரசு நேரில் கண்டது.
பயணிகள் சோதிக்கப்படுமுன், மின்சிகரெட் வைத்துள்ளனரா என அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அப்படி வைத்திருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுகுறித்த சுவரொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.
மின்சிகரெட் வைத்திருந்தால் தெரிவிக்கவேண்டும்
சிங்கப்பூரில் மின்சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளதால் சிங்கப்பூருக்குள் நுழையும்போதே மின்சிகரெட் வைத்திருக்கும் பயணிகள் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
அப்படி ஏதேனும் வைத்திருந்தால், அங்குச் சுகாதார அறிவியல் ஆணையம் வைத்துள்ள தொட்டிகளில் மின்சிகரெட்டுகளைத் தாமே வீச வேண்டும் அல்லது அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சிங்கப்பூர் முழுவதும் நடைபெறும் ‘பின் த வேப்’ இயக்கத்துடன் இது இணங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடத்தல் நோக்கத்துடன் அதிக மின்சிகரெட்டுகளை எடுத்துவராத பட்சத்தில், தாமே முன்வந்து தம் மின்சிகரெட்டுகளை வீசுவோர் அல்லது அவைபற்றி அதிகாரிகளிடம் தெரிவிப்போர்மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படாது.
மின்சிகரெட் வைத்திருப்பதைத் தெரிவிக்காமல் சோதனைகளில் பிடிபடுவோர்க்கு 2,000 வெள்ளிவரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது சுகாதார அறிவியல் ஆணையம் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கூடும்.
சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் இரண்டு மணி நேரத்தில் அதிகாரிகள் குறைந்தது ஏழு மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் (ஹெச்எஸ்ஏ) தொட்டிகளில் வீசினர்.
பொதுவாக, அதிகாரிகள் கேட்டபோதே பயணிகள் மின்சிகரெட்டுகள் வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதால் அதிகாரிகள் அவற்றை அவர்கள் கண்முன்னே ‘ஹெச்எஸ்ஏ’ தொட்டிகளில் வீசினரே ஒழிய, அவர்கள்மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கவில்லை. “ஆனால் மறுபடியும் இப்படிச் செய்தால் அபராதம் விதிக்கப்படலாம்,” என அதிகாரி எச்சரித்தார்.
துவாஸ் சோதனைச்சாவடியில் பேருந்து, கார், மோட்டார்சைக்கிள் வழியாகச் சிங்கப்பூருக்கு வந்த பயணிகள் அனைவரும் தீவிரமாகச் சோதிக்கப்பட்டனர். குறைந்தது இரு பேருந்துப் பயணிகள் மின்சிகரெட்டுகள் வைத்திருந்ததை ஒப்புக்கொண்டு வீசினர் அல்லது ஒப்படைத்தனர்.
மின்சிகரெட் கடத்தல் முயற்சிகளை முறியடிக்க, குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் ஒருங்கிணைந்து குறிவைக்கும் நிலையம் (Integrated Targeting Centre) ஏழு நாள்கள், 24 மணி நேரம் தரவு ஆய்வு அடிப்படையில் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், இறக்குமதிகள் பற்றி முன்கூட்டியே தகவல்கள் சேகரிக்கிறது. கடத்தல் தொடர்பாகச் சந்தேகிக்கப்படுபவை சோதனைச்சாவடிகளில் சோதிக்கப்படும்.
சோதனைச்சாவடிகளிலுள்ள அதிகாரிகளும் தம் அனுபவம் வைத்து சந்தேகத்திற்குரியவ நபர்கள், இறக்குமதிகளைச் சோதிப்பர். கதிர்வீச்சு நுண்ணாய்வுக் கருவிகள் போன்ற கருவிகளும் கைகொடுக்கக்கூடும்.
கூடுதல் சோதனைகளால் ஏற்படும் நெரிசலால் வேலைக்குத் தாமதம் அடையக்கூடும் என்றார் துவாஸ் வழியாக அன்றாடம் சிங்கப்பூருக்கு வரும் தேவ், 29.
“எனக்குத் தெரிந்தவரின் வாழ்க்கை மின்சிகரெட்டால் அழிந்துபோனது. அதனால் நான் இம்முயற்சியை வரவேற்கிறேன்,” என்றார் மற்றொரு பயணி சித்ரா, 37.
மின்சிகரெட் குற்றங்கள் தொடர்பாகப் புகையிலை நிர்வாகக் கிளைக்கு 6684-2036/6684-2037 எண்களில் அன்றாடம் காலை 9 முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் புகாரளிக்கலாம்; அல்லது www.go.gov.sg/reportvape இணையத்தளத்துக்குச் செல்லலாம்.