உள்ளூர் செயற்கை நுண்ணறிவு மொழிக் கட்டமைப்பில் கூடுதல் அம்சங்கள்

2 mins read
cb356e3b-b371-4be3-9079-a1727a39db67
சீ-லயன் குழுவில் அங்கம் வகிக்கும் (இடமிருந்து) திருவாட்டி ஹம்சவர்தினி ரங்கராஜன், டாக்டர் நூய் ஜுயான் காங், டாக்டர் லெஸ்லி டியோ, திருவாட்டி லியோங் வாய் யி, திரு டாய் ஙீ சியா, திரு டேவிட் ஓங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர் செயற்கை நுண்ணறிவு மொழிக் கட்டமைப்பான சீ-லயனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை 235,000 பதிவிறக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்தோனீசியாவைச் சேர்ந்த GoTo போன்ற பெரிய நிறுவனங்கள் சீ-லயன் செயற்கை நுண்ணறிவு மொழிக் கட்டமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சீ-லயன் செயற்கை நுண்ணறிவு மொழிக் கட்டமைப்பில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரல் அடையாள முறையை இவ்வாண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, காட்சி அடையாள முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறியப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி சீ-லயன் செயற்கை நுண்ணறிவு மொழிக் கட்டமைப்பு 13 மொழிகளை அடையாளம் காண்கிறது.

அவற்றில் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய், ஜாவா மொழி, சுடனீஸ், தாய்லாந்து மொழி, வியட்னாமிய மொழி ஆகியவை அடங்கும்.

சீ-லயனை அதன் மொழி தொடர்பான அம்சங்களுக்காக சில வர்த்தகங்கள் பயன்படுத்துகின்றன.

கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செலவு அதிகம் என்றார் சீ-லயன் நிறுவனத்தின் தலைமைத் தரவு அதிகாரி ஒஃபிர் ஷலேவ்.

எனவே, பிற துறைகளைப் போல தொடர் பயிற்சி அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.

திறந்த அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு மொழிக் கட்டமைப்பை உருவாக்க சீ-லயன் நடைமுறைப்படுத்தும் $70 மில்லியன் திட்டம், பண்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது.

இத்திட்டம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு தேசிய ஆய்வு அறநிறுவனம் நிதி வழங்குகிறது.

அத்துடன், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வுக்கான முகவை ஆதரவு வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்