பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி: கல்வி அமைச்சு

பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி: கல்வி அமைச்சு

2 mins read
a22dab38-82f2-4ff4-b26f-50b51411489c
கூடுதல் நிதி உதவி போக்குவரத்துக் கட்டண வருவாயில் 20 விழுக்காட்டை ஈடுசெய்யும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிக்கூடங்களுக்குப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மே, ஜூன் மாதங்களில் கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவி, அவற்றின் போக்குவரத்துக் கட்டண வருவாயில் 20 விழுக்காட்டை ஈடுசெய்யும்.

ஜூலை மாதம் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், அமைச்சு நிர்ணயித்துள்ள ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கட்டணங்களை உயர்த்திக்கொள்ளும் நீக்குப்போக்கை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் முதல் அத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்கெனவே தற்காலிக நிதி ஆதரவை வழங்கி வருவதாக, ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.

அந்தத் தற்காலிக உதவி, 13 விழுக்காட்டு போக்குவரத்துக் கட்டண வருவாய்க்கு ஈடாக இருந்தது.

ஜூன் மாதத்திற்குப் பிறகும் எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், பள்ளிப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் தங்களது இயக்கச் செலவுகளை ஈடுசெய்ய, காலவரையறைக்கு உட்பட்ட எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதிக்க அனுமதிக்க இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபட்சக் கட்டணத்தை அமைச்சு நிர்ணயிக்கும். பேருந்து நிறுவனங்கள் அந்தத் தொகை வரை கட்டணத்தை உயர்த்தலாம்.

புதிய பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் குறித்த தகவல்களைப் பெற்றோர்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் கட்டண உச்சவரம்பு குறித்து அந்த நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

அவ்வாறு செய்வது ஜூன் மாத விடுமுறைக்குப் பின்னர், போக்குவரத்து ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சு, எரிபொருள் விலைகளை தொடர்ந்து மறுஆய்வு செய்ய இருப்பதாகக் கூறியது.

விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு, கட்டணங்களைச் சரிசெய்வது பற்றியும் தேவைப்பட்டால், கூடுதல் கட்டணத்தை நீக்குவது குறித்தும் பரிசீலிக்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்