சமூக அறிவியல், மானுடவியல் துறையின் ஆராய்ச்சிக்காகக் கல்வி அமைச்சு அடுத்த ஐந்தாண்டுகளில் $556 மில்லியனை ஒதுக்கவுள்ளது.
சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய முக்கியத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட $457 மில்லியனைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகம்.
மன்றம் 2016ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சமூக அறிவியல், மானுடவியல் ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் நோக்கில் அது அமைக்கப்பட்டது.
செலவினங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்து கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வியாழக்கிழமை (பிப்ரவரி 26) அறிவித்தார்.
“நாம் அதிக சிக்கல்கள் நிறைந்த, நிச்சயமற்ற காலத்தில் வாழ்கிறோம். மாற்றங்களுக்கு இடையில், சமூக அறிவியல், மானுடவியல் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கவும், போக்குகளை அடையாளம் காணவும், வாய்ப்புகளைக் கைப்பற்றவும், சிரமங்களைத் தவிர்க்கவும் உதவலாம்,” என்று திரு லீ கூறினார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 சமூக அறிவியல், மானுடவியல் சார்ந்த கருத்துத் திரட்டுத் திருவிழாவின் தொடக்கநிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
பிப்ரவரி 26 முதல் மார்ச் 27 வரை நடைபெறும் அந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்கின்றனர். மனநலம், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை ஏற்பது போன்ற அம்சங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்துகொள்வர்.
வலுவான உபகாரச் சம்பளம் வழங்குவதற்கும் மேலாக, சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ள உதவும் ஆராய்ச்சிக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்க விரும்புவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அதற்கு சிங்கப்பூரின் தனித்துவமான சூழலைப் புரிந்துகொண்டு மாற்றத்தைக் கொண்டுவர ஆராய்ச்சியைப் பயன்படுத்தக்கூடிய நமது சொந்த, உலகத்தரம் வாய்ந்த ஆய்வாளர்களை உருவாக்கவேண்டும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் சமூக அறிவியல், மானுடவியல் துறையின் ஆராய்ச்சி, உலகச் சவால்களையும் சமாளிக்க உதவலாம் என்றும் திரு லீ சொன்னார்.

