கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதி ஆகியவற்றில் கூடுதலான பசுமைப் பகுதிகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி துணையமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.
ஆனால், அந்தப் பகுதிகளில் குறைவான வீடுகளே கட்டப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களிடம் திரு டான் பேசினார்.
கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதிக்கான திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் கூடுதலான பசுமைப் பகுதிகளைப் பாதுகாக்க முடிவெடுக்கப்பட்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
“இரண்டு பகுதிகளிலும் திட்டமிடப்பட்டதைவிட அதிகமான பசுமைப் பகுதிகள் பாதுகாக்கப்படும். எந்த அளவிலான பகுதிகள் பாதுகாக்கப்படும் என்பதை ஆராய்ந்துவருகிறோம். ஆகையால், சக சிங்கப்பூரர்களுக்கென குறைவான வீடுகளையே அந்த வட்டாரங்களில் கட்ட முடியும் என்பதையும் நாம் ஏற்கவேண்டும்,” என்றார் திரு டான்.
கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதி ஆகியவை குறித்த கருத்துகளைப் பொதுமக்கள் இம்மாதம் 6ஆம் தேதிவரை சமர்ப்பித்தனர்.
இருப்பினும், சிங்கப்பூரர்களின் கருத்துகளை அதிகாரிகள் தொடர்ந்து பெறுவர் என்ற டான், அடுத்த சில மாதங்களில் திட்டத்தை நிறைவுசெய்ய முற்படுகிறோம் என்றார்.
கில்மன் பேரெக்ஸ் வட்டாரத்தில் 40 விழுக்காட்டுப் பசுமைப் பகுதியையும் மாஜு வனப்பகுதியில் 35 விழுக்காட்டுப் பசுமைப் பகுதியையும் பாதுகாக்கத் தொடக்கக் கட்டத் திட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
“தற்போதைய திட்டம் இன்னும் முடிவாகவில்லை,” என்றார் டான்.
தெலுக் பிளாங்கா ஹில் பூங்கா, லெப்ரடார் வனப்பகுதி, ஹார்ட்பார்க் ஆகிய பசுமைப் பகுதிகளுடன் இணைக்க கில்மன் பேரெக்ஸில் இன்னும் விரிவான பசுமை வட்டாரத்தை உருவாக்கும்படி இயற்கை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
பொதுமக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று டான் குறிப்பிட்டார்.
சன்செட் வேக்கு அருகில் உள்ள மாஜு வனப்பகுதி கிட்டத்தட்ட 23 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. அதில் மூன்றில் இரண்டு பங்குப் பரப்பளவில் வீடுகளைக் கட்டவும் எஞ்சியுள்ள இடத்தை வனவிலங்குச் சரணாலயமாகவும் சுற்றுப்புறப் பகுதியாகவும் தக்கவைக்க இதற்குமுன் திட்டமிடப்பட்டிருந்தது.
இம்மாதத் தொடக்கத்தில், சிங்கப்பூரின் வீட்டுத் தேவைகளை அடுத்த பத்தாண்டுகளுக்குப் பூர்த்திசெய்ய கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதி ஆகியவை தேவைப்படுவதாக நாடாளுமன்றத்தில் டான் சொன்னார்.
அதுதொடர்பில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர்.


