அக்டோபர் 15 முதல், குடும்ப நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் அதிகாரம்

அக்டோபர் 15 முதல், குடும்ப நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் அதிகாரம்

2 mins read
e463e779-5be8-40dd-b218-8f4b573ec109
குழந்தைகளின் நலனைப் பாதிக்கக்கூடிய விண்ணப்பத்தைத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை நீதிபதிகள் பெறுவர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், திருத்தப்பட்ட குடும்ப நீதிச் சட்டம் 2024 அக்டோபர் 15ஆம் தேதி நடப்புக்கு வந்த பின்னர் குடும்ப நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும்.

குழந்தையின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய அல்லது மணவிலக்கு நடைமுறைகளில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய தகுதியற்ற விண்ணப்பங்களைத் தடுக்கும் அதிகாரத்தை அப்போது முதல் குடும்ப நீதிமன்ற நீதிபதிகள் பெறுவர்.

இதனை விளக்கி திங்கட்கிழமை (செப்டம்பர் 16) மாலை குடும்ப நீதிமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

திருத்தச் சட்டத்தில் இடம்பெறும் மேலும் சில அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்று இருந்தன.

வழக்கு நடைமுறையின் நேர்மையைப் பாதிக்கக்கூடிய, தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய, வழக்குச் செலவுகளை அதிகரிக்கக்கூடிய, குழந்தையின் நல்வாழ்வில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எவர் ஒருவர் விண்ணப்பம் செய்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நீதிபதிகளுக்குக் கிடைக்கும்.

நடப்பில் உள்ள நீதிமன்ற ஆணையை மாற்றக்கோரும் விண்ணப்பம் தகுதியற்றதாகக் கருதப்படும் பட்சத்தில், அதனைத் தடுக்கும் அதிகாரத்தையும் அவர்கள் பெறுவர்.

வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் விண்ணப்பம் தாக்கல் செய்யாதபோது, பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவருக்கும் விசாரணையில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதை உறுதி செய்த பின்னர், உத்தரவுகளைப் பிறக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெறும்.

குடும்ப வழக்கில் தொடர்புடையவரைச் சென்று பார்ப்பது, காவலில் வைப்பது, பராமரிப்புத் தொகை வழங்குவது போன்ற அம்சங்கள் தொடர்பான உத்தரவுகள் அவை.

குடும்ப வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலர் வழக்கறிஞரைப் பெறுவதில்லை என்று 2023 மே மாதம் குடும்ப நீதி சீர்திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது அப்போதைய சட்ட அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்து இருந்தார்.

எனவே, தங்களது பிரச்சினையைக் கவனிக்க அல்லது தங்களது குழந்தையின் நல்வாழ்வின் பாதுகாப்புக்குத் தேவைப்படும் உத்தரவுகள் நடப்பில் இருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

குறிப்புச் சொற்கள்