சாலைகளில் பேருந்துகளின் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பேருந்துத் தடங்களுக்குள் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் முறை சோதிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதற்குக் கைகொடுக்கும். பேருந்துத் தடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை வாகனமோட்டிகள் மீறுவதைத் தடுப்பது நோக்கம்.
வாகனமோட்டிகள் அவ்வாறு செய்தால் விபத்து நேரக்கூடும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) கூறினார்.
“அத்தகைய சம்பவங்கள் நிகழும்போது பேருந்து ஓட்டுநர்கள் திடீரென்று வேகக் கட்டுப்பாட்டு விசையை இயக்க வேண்டியிருக்கும். அதனால் பயணிகள் விழக்கூடும்,” என்றார் அவர்.
தோ பாயோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக நடுவத்தின் முகப்பில் முதன்முறையாக நடத்தப்பட்ட பேருந்துப் பாதுகாப்புச் சாலைக்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் திரு முரளி பேசினார்.
பொதுப் பேருந்துகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பணிக்குழுவொன்று இவ்வாண்டு (2025) மார்ச் மாதம் சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
அதன் பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் நடைமுறைப்படுத்தும் புதிய முயற்சிகள் குறித்துத் திரு முரளி கருத்துரைத்தார்.
வேறு சில நடவடிக்கைகளும் சோதிக்கப்படுகின்றன. பேருந்துகளில் மோதல் எச்சரிக்கைக் கட்டமைப்புகளைப் பொருத்துவது, முதிய பயணிகளுக்காகப் பாதுகாப்பு நடைமுறைகளை ஒலிபரப்புவது, பாதுகாப்பு விதிமுறைகளை சிறப்பாகப் பின்பற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது முதலியவை அவற்றுள் சில.
தொடர்புடைய செய்திகள்
பேருந்துத் தடங்கள் செயல்படும் நேரங்களில் அவற்றுக்குள் செல்கின்ற வாகனமோட்டிகளைப் பிடிப்பதற்கான சோதனை நடவடிக்கையில் நான்கு பொதுப் பேருந்துகள் பங்கெடுக்கின்றன. சோதனை நடவடிக்கை இம்மாதம் (ஆகஸ்ட்) 4ஆம் தேதி தொடங்கியதாக நிலப் போக்குரவத்து ஆணையம் தெரிவித்தது.
பேருந்தின் கேமராவில் உள்ள படங்களைப் பகுப்பாய்வு செய்யச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நாளின் உச்ச நேரங்களில் பேருந்துகளுக்கென ஒதுக்கப்பட்ட தடங்களை அவை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் பேருந்துகள் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்த்துத் திறம்பட்ட முறையில் இயங்க முடியும்.

