தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயராது உழைக்கும் மூத்தோருக்கு ஆதரவாக மெடிசேவ் நிரப்புதொகை

2 mins read
53ee3f93-ff59-4c35-b2b9-b11d57ff8fe4
மெடி‌ஷீல்டு லைஃப் திட்டம் சென்ற ஆண்டு மறுபரிசீலனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது 78வது வயதிலும் மனைவியைக் கவனித்துக்கொள்ளவும் பேத்திக்கு ஆதரவளிக்கவும் தொடர்ந்து உழைத்துவரும் திரு ராகவன் பாலனுக்குக் கைகொடுக்கிறது முன்னோடித் தலைமுறையினருக்கான மெடிசேவ் நிரப்புதொகை.

தற்போது பாதுகாவலராகப் பணியாற்றிவரும் இவர், 14 வயதிலிருந்து ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

“என் ஊதியம்தான் குடும்பத்தின் ஒரே வருமானம் என்பதால், அதனை அன்றாடச் செலவுகளுக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் என் மகள் வயிற்றுப் பேத்திக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இத்துடன் மருத்துவச் செலவுகளும் இருக்கின்றன,” என்றார் திரு பாலன்.

தம் மனைவி சுஷாந்தா நாராயணன், பார்கின்சன்ஸ் நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் தாம் முன்பு தொடர்ந்து புகைபிடித்ததால் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு ஆளாகியுள்ளதாகவும் சொன்னார். இதனால் இருவருக்கும் ஆகும் மருத்துவச் செலவுகளும் அதிகமென்றார்.

இந்நிலையில் அவருக்கு ஜூலையில் தமது மெடிசேவ் கணக்கில் கிடைக்கவுள்ள கூடுதல் நிரப்புதொகை இச்சிரமத்தைக் குறைக்கும் என நம்புகிறார் திரு பாலன்.

யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் தமக்கும் தம் மனைவிக்கும் இந்தத் தொகை உதவும் என்பது கூடுதல் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தார் அவர்.

ஏறத்தாழ 300,000 முன்னோடித் தலைமுறையினர் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் கூடுதல் நிரப்புதொகை பெறுவார்கள் என்றும் மொத்தம் $160 மில்லியனுக்கும் அதிக மதிப்பில் நிரப்புதொகை வழங்கப்படவுள்ளது என்றும் திங்கட்கிழமை (ஜூன் 16) நிதி அமைச்சு கூறியது.

முன்னோடித் தலைமுறையினரின் மெடிசேவ் கணக்குகளில் சென்ற ஆண்டு $250லிருந்து $900 வரை போடப்பட்ட நிலையில் இத்தொகை ஜூலை முதல் $300லிருந்து $1,200 வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்