பாலர்பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சாரா பணிகளுக்காக நேரம் ஒதுக்கப்படும்

2027 நவம்பர் 1 முதல்

பாலர்பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சாரா பணிகளுக்காக நேரம் ஒதுக்கப்படும்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: சாவ்பாவ்

13 Oct 2026 - 5:11 pm

2 mins read

பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பின் உரிமம்பெற்ற பாலர்பள்ளிகள் அனைத்தும் அவற்றின் கல்வியாளர்களுக்கு 2027 நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து வேலை நேரத்தின்போது கற்பித்தல் சாரா பணிகளுக்காக வாரந்தோறும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) சன்டெக் மாநாட்டு நிலையத்தில் நடந்த பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பின் உபகாரச் சம்பள, பயிற்சி விருதளிப்பு விழாவில் இதனைத் தெரிவித்தார்.

கற்பித்தல் சாரா பணி என்பது கற்பித்தல், பாலர்களைப் பேணுவதற்கு அப்பாற்பட்டு பாடத் திட்டமிடல், பாலர்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்துதல், பெற்றோர், சமூகப் பங்காளிகளுடன் சேர்ந்து செயல்படுதல் போன்ற பொறுப்புகளில் ஈடுபடுவதற்கான நேரமாகும்.

“கற்பித்தல் சாரா பணிகளுக்காக நேரம் ஒதுக்குவதால் பிள்ளைகள் மீதான கவனம் குறைவதாக அர்த்தமாகாது. மேம்பட்ட தயாரிப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடுகள், மெருகேற்றப்பட்ட பாலர்பள்ளித் தரம் ஆகியவற்றின்வழி பிள்ளைகளின் வளர்ச்சி உறுதிசெய்யப்படுகிறது,” என்று அமைச்சர் மசகோஸ் விளக்கினார்.

வேலை நேரத்தில் கற்பித்தல் பணிச்சுமை அதிகம் இருப்பதால் இதர பொறுப்புகளை நிறைவேற்ற கடினமாக உள்ளதென கல்வியாளர்கள் பகிர்ந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவும் நோக்குடன் இந்த ஏற்பாடு கட்டாயமாக்கப்படவுள்ளது.

பாலர்பள்ளிகள் அவற்றின் செயல்பாட்டுத் தேவைகளைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்களுக்கான கற்பித்தல் சாரா பணிகளுக்கு நீக்குப்போக்கான முறையில் நேரம் ஒதுக்கலாம்.

கற்பித்தல் சாரா பணிகளுக்காக வாரந்தோறும் ஒதுக்கப்படும் குறைந்தது இரண்டு மணி நேரம், ஆசிரியர்களின் வேலை நேரத்திற்குள் இருப்பதையும் பாலர்பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும்.

இரண்டு மணி நேரம் என்ற அளவு ஆசிரியர்களின், பாலர்பள்ளிகளின் ஆலோசனையின் படியும் பாலர்பள்ளித் துறையில் தற்போதைய செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.

பயிற்சி ஆசிரியர்களுக்கான பாராட்டு விருதை வென்றவர்களில் ஒருவரான காஞ்சனா புரவலன், 20, பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஏற்பாடு பேருதவியாக இருக்கும் எனக் கருதினார்.

“பெரும்பாலான நேரங்களில் பாலர்பள்ளி ஆசிரியர்களின் பணி, வகுப்பறைக்கு அப்பாற்பட்டு தொடரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையை மாற்ற இம்முயற்சி நிச்சயம் உதவும்,” என்றார் அவர்.

விருதளிப்பு விழாவில் 400க்கும் மேற்பட்ட தற்போதைய, வருங்காலப் பாலர்பருவ ஆசிரியர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளும் உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டன.

பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பின் உபகாரச் சம்பள, பயிற்சி விருதளிப்பு விழாவில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, 400க்கும் மேற்பட்ட தற்போதைய, வருங்காலப் பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.
பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பின் உபகாரச் சம்பள, பயிற்சி விருதளிப்பு விழாவில் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, 400க்கும் மேற்பட்ட தற்போதைய, வருங்காலப் பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வியாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதுடன் அவர்களின் திறன்களை வளர்க்கவும் அவர்களது தொழில்முறைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் பாலர்பருவ ஆசிரியர்களின் திறன்களை வளர்க்க அரசாங்கம் $75 மில்லியனுக்கும் மேலாக முதலீடு செய்துள்ளது என்றும் அவர்களுக்கு நிச்சயம் உரிய ஆதரவு வழங்கப்படும் என்றும் பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு உறுதியளித்தது.

குறிப்புச் சொற்கள்
உரிமம்அமைப்புவேலைநேரம்பள்ளிபாலர் பள்ளிகண்காட்சிநவம்பர்