வேக வரம்பை மீறும் வாகனவோட்டிகளுக்கு 2026லிருந்து கூடுதல் தண்டப்புள்ளிகள், அபராதம்

1 mins read
f1215238-f6b4-41b1-adc2-8004c210a3e9
இந்தக் கூடுதல் தண்டப்புள்ளிகளும் அபராதமும் 2026 ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வரும். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

வேக வரம்பை மீறும் வாகனவோட்டிகளுக்கு 2026லிருந்து கூடுதல் தண்டப்புள்ளிகளும் அபராதமும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு புதன்கிழமை (மே 28) தெரிவித்தது.

இந்தக் குற்றங்களுக்கு கூடுதல் தண்டப்புள்ளிகளை வழங்குவதும் கூடுதல் அபராதம் விதிப்பதும் இதில் அடங்கும்.

தங்கள் வாகன அல்லது சாலை வேக வரம்பை மீறும் வாகனவோட்டிகள் மேலும் இரண்டு முதல் ஆறு தண்டப்புள்ளிகள் வரை பெறுவதை எதிர்பார்க்கலாம்.

வேக வரம்புக்குமேல் மணிக்கு 20 கிலோமீட்டருக்கு மிகாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டவர்களுக்கு ஆறு தண்டப்புள்ளிகள் கிடைக்கும். தற்போது அது நான்கு தண்டப்புள்ளிகளாக உள்ளது.

வேக வரம்புக்குமேல் 41 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை செல்லும் வாகனவோட்டிகளுக்கு தற்போதைய 12 தண்டப்புள்ளிகளிலிருந்து 18 தண்டப்புள்ளிகள் கிடைக்கும். அவர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றத்தின் தீவிரம், வாகன வகையைப் பொறுத்து, அபராதத் தொகை $50 முதல் $150 வரை அதிகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு வெளியிட்ட தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

24 மாதங்களுக்குள் 24 தண்டப்புள்ளிகளைப் பெறும் வாகனவோட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

இந்தக் கூடுதல் தண்டப்புள்ளிகளும் அபராதமும் 2026 ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வரும்.

“இந்தக் கூடுதல் தண்டப்புள்ளிகளும் அபராதமும், சாலைப் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதில் உள்துறை அமைச்சு கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகின்றன. சாலைப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும்,” என்று அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்