பல் சுகாதாரத்துக்கு பற்களின் அடிவேர் சிகிச்சை (root canal), பல் காப்பு அணி (crown) ஆகியவற்றுக்கு சாஸ் திட்டத்தின்கீழ் வரும் சிகிச்சைக்கு கூடுதல் மானியங்கள் வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம், பற்களைப் பாதுகாக்க சிங்கப்பூரர்களுக்கு ஆகும் செலவினம் கட்டுப்படியாகக்கூடிய நிலையில் எளிதாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மானியங்கள் இவ்வாண்டு நான்காம் காலாண்டில் நடப்புக்கு வரும். மானியங்களின் வரையறை ஒருவர் எந்த மாதிரியான சிகிச்சை முறை, எந்த மாதிரியான சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டையை வைத்துள்ளார் என்பதைப் பொறுத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல் சுகாதாரத்துக்கு வழங்கப்படும் இந்த உயர் அளவு மானியம் 1.7 மில்லியன் சாஸ் வைத்திருப்போருக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஓங் யி காங், பல் சுகாதாரத்துக்கு ஆகும் செலவு கவலையளிப்பதாக உருவாகி வருவதாக விளக்கினார்.
தொடர்ந்து பேசிய திரு ஓங் யி காங், தம்மை சந்தித்த பல குடியிருப்பாளர்கள் பழுதடைந்த பல்லை சிகிச்சை மூலம் சரிசெய்வதற்கு பதிலாக அதை அகற்றுவதே செலவு குறைவு எனவும் அடிக்கடி மருத்துவ நிலையத்துக்கும் செல்ல வேண்டியதில்லை என்று கூறியதையும் நினைவுகூர்ந்தார்.