‘ஸ்பெக்ஸ்எஸ்ஜி’ (SpexSG) திட்டம் சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்த உள்ளதாகத் தற்காலிக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் டேவிட் நியோ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த விளையாட்டு முறையை வீரர்களை மையமாகக் கொண்டதாகவும் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே அதன் முக்கிய நோக்கம் என்றார் அவர்.
அதற்காக, விளையாட்டு அறிவியல், விளையாட்டு மேலாண்மை, வீரர்களின் வாழ்க்கை மேலாண்மை ஆகிய துறைகளில் வழங்கப்படும் ஆதரவை விரிவுபடுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்கு ‘ஸ்பெக்ஸ்எஸ்ஜி’ வழிவகுக்கும்.
ஊக்கப்படுத்தி ஒன்றிணைக்கக்கூடிய உலகத்தரம் வாய்ந்த சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக ‘ஸ்பெக்ஸ்எஸ்ஜி’ அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, சிங்கப்பூர் அணியின் அனைத்து மாணவ விளையாட்டு வீரர்களுக்கும் கல்வி வழிகாட்டியாகச் செயல்படும் வகையில் அதன் பங்கை விரிவுபடுத்தும் என்று கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான திரு நியோ தெரிவித்தார்.
புதன்கிழமை (ஏப்ரல் 29) நடந்த ஸ்பெக்ஸ் விளையாட்டு வீரர்களுக்கான பட்டம் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு நியோ உரையாற்றினார்.
2029ல் நடைபெறவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளையும் உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளையும் சிங்கப்பூர் நடத்தவிருப்பதால் அரசாங்கம் முழு நேரமாகப் பயிற்சிபெறும் அல்லது அதிகப் பயிற்சிச் சுமையுடன் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார் திரு நியோ.
“முதற்கட்டமாக, 2029ஆம் ஆண்டுப் போட்டிகளுக்குத் தயாராகிவரும் நிலையில், பல்வேறு வகையான விளையாட்டுகளில் முழு நேரப் பயிற்சிக்கு இணையான பயிற்சியை மேற்கொள்ள கூடுதலாக 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்போம்.
தொடர்புடைய செய்திகள்
“இரண்டாவதாக, தேசிய விளையாட்டுச் சங்கங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும். மூன்றாவதாக, விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை மேலாண்மை போன்ற துறைகளில் உயர் செயல்திறன் விளையாட்டுக் கழகத்தின் தொழில்நுட்பத் திறன்களையும் வல்லமையையும் மேம்படுத்துவோம். ‘ஸ்பெக்ஸ்எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வாழ்நாள் முழுமைக்குமான ஆதரவையும் நாங்கள் வலுப்படுத்துவோம்,” என்று திரு நியோ விளக்கினார்.
2029க்குள் சிறப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, 110 வல்லுநர்களாக உயர்த்தப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் விளையாட்டு அறிவியலாளர்களின் பரந்த கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.
‘ஸ்பெக்ஸ்’ உபகாரச் சம்பளம், ‘ஸ்பெக்ஸ்பொட்டேன்ஷல்’ ஆகிய இரு திட்டங்களின்கீழ் சாதனை எண்ணிக்கையாக 247 விளையாட்டு வீரர்கள் மேம்பட்ட ஆதரவைப் பெற்றனர்.
இரு திட்டங்களும் விளையாட்டு அரங்கில் வீரர்கள் தங்களின் முழுமையான திறனை வெளிப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரிவான ‘ஸ்பெக்ஸ்’ திட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன.
புதிய ‘ஸ்பெக்ஸ்பொட்டேன்ஷல்’ விளையாட்டு வீரரான கார்த்திக் ராமசாமி, 40, ஆங்கில பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் சிங்கப்பூரின் ‘கியூஸ்போர்ட்ஸ்’ விளையாட்டு வீரர் ஆவார்.
2025 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஆங்கில பில்லியர்ட்ஸ் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2025ஆம் ஆண்டில் உலகளவில் குவீன்ஸ்லாந்துப் பொது விருது ஒற்றையர் பிரிவில் கார்த்திக் தங்கம் வென்றார்.
மேலும், இங்கிலீஷ் ஓபன் ஒற்றையர் பிரிவில் பலம் வாய்ந்த உலகளாவிய வீரர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு கூட்டாக அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் போன்ற கழகங்கள் தனித்துவமான விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களை உலக அளவில் போட்டியிட உதவுவதில் முக்கிய அங்கம் வகிப்பதாகத் திரு கார்த்திக் தெரிவித்தார்.

