புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் கட்டுமானத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியிருக்கிறார்.
இயந்திரமனிதக் கருவிகளையும் தானியக்கத் தீர்வுகளையும் புதுப்பித்து, சோதித்து, நடைமுறைப்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு அது பொருந்தும் என்றார் அவர்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற கன்டெக்@பிடிடி கட்டுமானத் தொழில்நுட்பக் கண்காட்சியில் திரு சீ பேசினார்.
ஜேடிசி திட்டங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பப் பங்காளிகளின் பட்டியலைக் கட்டுமானத் துறையின் மேம்பாட்டாளர்களும் ஒப்பந்ததாரர்களும் அணுக முடியும் என்று அவர் கூறினார். அதன் மூலம் இந்தத் தொழில்நுட்பங்களை அவர்கள் நம்பிக்கையோடு பயன்படுத்த முடியும் என்றும் திரு சீ சொன்னார்.
புதிய தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கான இடங்களுக்குரிய வாடகைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். புத்தாக்கத்தை ஊக்குவிப்பது நோக்கம்.
அத்துடன், புதிய நிறுவனங்களின் தீர்வுகள் சோதித்துப் பார்க்கப்பட்ட பிறகு, அவற்றைக் கட்டுமானத் துறையினர் ஏற்றுக்கொள்வதற்கும் உதவிகள் வழங்கப்படும்.
“ஒருங்கிணைந்த மின்னிலக்க விநியோக நடவடிக்கைகளையும் முன்தயாரிப்புக் கட்டுமான முறைகளையும் நடைமுறைப்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். இவற்றைப் பயன்படுத்தும் புதிய கட்டுமானத் திட்டங்கள், மொத்தக் கட்டடப் பரப்பளவின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டில் ஏறக்குறைய 20 விழுக்காடாக இருந்தது. 2025ல் அது கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக்குக் கூடியுள்ளது,” என்றார் திரு சீ.
ஒருங்கிணைந்த மின்னிலக்க விநியோக நடவடிக்கைகள் என்பது மேம்பாட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியோரை இணைக்கும் பொதுவான மின்னிலக்கத் தரவுத் தளத்தைக் குறிக்கிறது.
வருங்காலத்தில் பல பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் வரவிருப்பதை அமைச்சர் சீ சுட்டினார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீட்டுத் திட்டங்கள், ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள லாங் ஐலண்ட் திட்டம், சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் முதலியவை அவற்றுள் சில. அந்தத் திட்டங்களில் இந்தக் கருவிகளும் புதிதாக உருவாகிவரும் மற்றத் தொழில்நுட்பங்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் திரு சீ சொன்னார்.
தானியக்க இயந்திரமனிதக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களின் துணையோடு கட்டுமானத் துறை தொடர்ந்து புதுப்புது எல்லைகளைத் தொட வேண்டும் என்றார் அவர். அப்போதுதான் கட்டுமானத் துறை, பணிகளை விரைவாகவும் மேலும் சிறந்த முறையிலும் நீடித்து நிலைத்திருக்கும் வகையிலும் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

