தேசிய உற்பத்தித்திறன் நிதிக்குக் கூடுதலாக 3 பில்லியன் வெள்ளி நிரப்புத்தொகை வழங்கப்படவுள்ளதாக இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தொழில்நுட்ப, புத்தாக்கத் திட்டங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாக இந்தப் புதிய நிரப்புத்தொகையை அறிவித்தார் பிரதமர் வோங்.
“தொழில்நுட்பத் துறையில் நமது போட்டித்தன்மையை அதிகரிக்கப் போதுமான வளங்களை நாம் ஒதுக்குவது அவசியம்,” என்றார் பிரதமர்.
‘சிலிக்கான் வேலி’ பகுதியிலிருந்து இயங்கிவரும் அமெரிக்கத் தொழில்நுட்பத் துறையின் புத்தாக்கத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சிங்கப்பூர் மேலும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கலாம் என்று எடுத்துரைத்தார்.
உலகளவில் முன்னணி நிறுவனங்களின் இருப்பிடமாக சிங்கப்பூர் திகழ்வதையும் பாராட்டினார் பிரதமர் வோங்.
மேலும், சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு உதவும் ஆராய்ச்சி, மேம்பாட்டு முயற்சிகளுக்கு $1 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி, மேம்பாட்டு முயற்சிகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து சுமார் 1 விழுக்காட்டை அரசாங்கம் ஆண்டுதோறும் முதலீடு செய்து வருகிறது.
இந்த முதலீடுகளின் பலன்களைத் தொடர்ந்து தக்கவைக்கவே இந்தப் புதிய முதலீடுகள் உதவும் என்றும் கூறினார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
“பல புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் முன்னணி நிறுவனங்கள் வளரும் ஓர் இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
இந்த முதலீட்டின்வழி உயிர்தொழில்நுட்பம், பகுதிமின்கடத்தித் துறைகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

