பொருத்தமான வேலைகளைக் கண்டறிவதில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அதிகச் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதில் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்துத் தமது அமைச்சு மதிப்பாய்வு செய்துவருவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் கூறினார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திரு ஸுல்கர்னைன் இதனைத் தெரிவித்தார்.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த வேலை தேடுவோர், பெரும்பாலும் சேவைத் துறைகளிலேயே வேலையில் சேர்கின்றனர்.
அங்குக் குறுகிய கால அறிவிப்பில் வேலை நேரங்களை மாற்றுவதற்கான நீக்குப்போக்குத்தன்மை குறைவாகவே இருக்கும்.
இதனால், குழந்தைகள் நோய்வாய்ப்படும்போது அவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவது போன்ற அவசர நிலைமைகளைக் கையாள்வது அவர்களுக்குக் கடினமாகிறது.
இந்தக் குடும்பங்களை வேலைக்குத் தயார்ப்படுத்தவும் அவர்களுக்குப் பொருத்தமான வேலைகளைக் கண்டறியவும் இறுதியில் அந்த வேலைகளில் அவர்கள் சிறப்பாகச் செயல்படவும் அமைச்சு தனது பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் அமைச்சு அதிக ஆதரவு வழங்கும் என்று திரு ஸுல்கர்னைன் கூறினார்.
தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள அத்தகையோர் முடிவு செய்யும்போது சில இழப்புகளையும் அவர்கள் ஏற்க வேண்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில் அவர்களின் வருமானம் தடைபடுகிறது. மேலும், அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்று உறுதியாகக் கூறவும் முடியாது.
இதனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ‘காம்லிங்க் பிளஸ்’ குடும்பங்களைச் சேர்ந்த 18க்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டோர்க்குக் ‘காம்லிங்க் பிளஸ்’ திறன் மேம்பாட்டு ஆதரவு முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் அமைச்சு, தனிமனிதர்கள் தங்கள் கல்வியைத் தொடரும் ஒவ்வொரு காலாண்டுக்கும் $500 நிதி ஊக்கத்தொகையை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான நிதி இழப்பை ஈடுசெய்யும்.

