முஸ்லிம் திருமணங்களை நடத்தி வைப்பதற்காக 23 புதிய காதி மற்றும் நைப் காதிகளை முஸ்லிம் திருமணப் பதிவகம் புதிதாக நியமித்துள்ளது.
ஏற்கெனவே இருந்த 39 காதி மற்றும் நைப் காதி தங்களது பொறுப்புகளை தக்கவைத்துத் தொடர்ந்து சேவையாற்றுவர்.
இதனையடுத்து, சிங்கப்பூரின் காதி மற்றும் நைப் காதிகளின் மொத்த எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
காதி மற்றும் நைப் காதிகள், முஸ்லிம் திருமணங்களை நடத்தி வைப்பதற்காக முறையான பயிற்சி பெற்றவர்கள்.
“திருமணத்தின் தொடக்கக் கட்டங்களில் இணையர்களுக்கு ஒரு நம்பகமான ஒருவரிடமிருந்து வழிகாட்டுதல் வேண்டும்,” என்று காதி மற்றும் நைப் காதிகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
புதன்கிழமை (ஜூன் 10) ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெற்ற காதி மற்றும் நைப் காதி நியமன விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு ஃபைஷால் உரையாற்றினார்.
அத்துடன், மலாய்-முஸ்லிம் இணையர்களுக்கும் குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காக சிங்கப்பூரில் உள்ள நான்கு முன்னணி பள்ளிவாசல்களில் குடும்ப மேம்பாட்டு அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அந்த அதிகாரிகள் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் அல்-ஃபலா பள்ளிவாசல், அல் கைர் பள்ளிவாசல், தாருல் குஃப்ரான் பள்ளிவாசல், அன்-நூர் பள்ளிவாசல் ஆகியவற்றிலிருந்து செயல்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது மலாய்-முஸ்லிம் குடும்பங்களுக்கான ஆதரவு மேம்பாடு குறித்து திரு ஃபைஷால் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி அறிமுகம் காண்கிறது.
மற்ற பள்ளிவாசல்களுடன் இணைந்து, இணையர்களுக்கான குடும்ப மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த உள்ளதாகவும் திரு ஃபைஷால் கூறினார்.
முஸ்லிம் இணையர்க்கான திருமண வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையின் தொடக்கக் காலத்திலும் உதவ அறிமுகம் கண்ட ‘அரிஃப்’ என்ற முன்னோடி முயற்சி இம்மாதத்திலிருந்து ‘பெர்சமாமு’ திட்டத்தின்கீழ் ஒரு நிரந்தர அங்கமாக ஒருங்கிணைக்கப்படும்.
2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பெர்சமாமு’ திட்டம் இதுவரை 36,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் இணையர்களுக்கு ஆதரவளித்துள்ளது.
திருமணங்களை வலுப்படுத்துவது குடும்பங்களையும் வலுப்படுத்தும் என்று திரு ஃபைஷால் குறிப்பிட்டார்.
“வலுவான குடும்பங்கள் இருப்பதால் நம் சமூகங்களும் சமுதாயமும் மேலும் வலுப்பெறுகின்றன,” என்றார் அவர்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நைப் காதியாக சேவையாற்றி வந்த உஸ்தாஸ் அப்துல் அஜீஸ் பின் முகமது தமது பொறுப்புகளைத் தொடரவுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு எழக்கூடிய கருத்து வேறுபாடுகள் இணையர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்றார் அவர்.
“புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது குடும்ப வாழ்வில் இன்றியமையாதது,” என்று அவர் சொன்னார்.
நிகழ்ச்சியில் ஒரு நினைவுமலரையும் பதிவகம் வெளியிட்டது. சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்விமான்கள், சமய ஆசிரியர்கள் சங்கத்தை (பெர்காஸ்) சேர்ந்த காதி, நைப் காதி, ‘அசாட்டிஸா’ பராமரிப்புச் (Asatizah Solace Care) சேவையாற்றும் பெண்கள் ஆகியோரின் அனுபவங்கள் அந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

