மோசமான இணையத் தீங்கால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்துள்ளார் 30களில் இருக்கும் ஜூனிபர் (உண்மைப் பெயரன்று).
தன்னுடன் பள்ளியில் முன்பு ஒன்றாகப் படித்த மாணவன் என்று நினைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் ஒருவருடன் ஜூனிபருக்கு நட்பு ஏற்பட்டது.
அது நாளடைவில் பெருந்தீங்கில் முடியும் என்று ஜூனிபர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அந்த நபர் ஜூனிபருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பத் தொடங்கினார்.
ஓரிரு முறையோடு நின்றுவிடாது, ஜூனிபரை அடிக்கடி தொந்தரவு செய்யும் அளவுக்கு அடிக்கடி அத்தகைய படங்களை அவர் அனுப்பி வந்தார்.
நண்பர் ஒருவரின் அறிவுறுத்தால் அதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்தார் ஜூனிபர்.
இப்போது தமது கைப்பேசி எண்ணை மாற்றிவிட்ட ஜூனிபர், சமூக ஊடகத் தளங்களில் தமக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் மட்டும் பழக்கம் வைத்துக்கொள்கிறார்.
இன்ஸ்டகிராமில் அந்த நபர் ஜூனிபரைத் தொந்தரவு செய்தபோது, அவ்வூடகம் தமக்கு பெரிய அளவில் உதவவில்லை என்று வருந்தினார் ஜூனிபர்.
தொடர்புடைய செய்திகள்
இதனால், குற்றவாளிகள் சமூக ஊடகத் தளங்களில் பல கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்க கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகள் தேவை என அவர் வலியுறுத்துகிறார்.
மேலும், இணையத் தீங்குகளால் பாதிக்கப்படும்போது உதவி பெறுவது எப்படி என்பது குறித்து குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோரின் ஈடுபாடு, பள்ளி சார்ந்த கல்வித் திட்டங்கள் போன்ற சமூக முயற்சிகளுக்கு அவர் ஆதரவளிக்கிறார்.
ஜூனிபர் போல பலரும் இத்தகைய இணையத் தீங்குகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இணையத் தீங்கு அல்லது துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பிறகு நீதி நாடுவோருக்குக் குற்றவாளியின் பெயர் தெரியாமல் இருப்பது ஒரு பெரிய தடையாக இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று சுட்டுகிறது.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உதவிவரும் லாப நோக்கற்ற அமைப்பான ‘ஷி’ அத்தகைய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
குற்றவாளியின் பெயர் தெரியாமல் இருப்பதற்கு அப்பாற்பட்டு, உதவி தேடுவதில் தெளிவின்மை போன்ற சவால்களையும் பாதிக்கப்படுவோர் எதிர்நோக்குவது அந்த ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது.
ஈராண்டுகளுக்கு முன்பிருந்து ‘ஷி’ அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இணையத் தீங்குகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இணையத் தீங்குகளால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட 25 தனிநபர்கள், ‘ஷி’ அமைப்பு நடத்திய நேர்காணலில் பங்கேற்றனர்.
தேசிய வடிவமைப்பு நிலையத்தில் வியாழக்கிழமை (மே 29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘ஷி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆய்வு பற்றி மேலும் விளக்கினர்.
சிங்கப்பூர் அரசாங்கம் விரைவில் இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
இணையத் தீங்குகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஆணையம் குற்றவாளிகளைக் கையாண்டு, சமூக ஊடகத் தளங்களுடன் ஒத்துழைத்து தீங்கு விளைவித்த தகவலை அகற்றும் பணிகளில் ஈடுபடும்.
பாதிக்கப்பட்டோரில் பலரும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தக்க தண்டனையை உடனடியாக வழங்கினால் இணையத் தீங்கு குறையும் என்று நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் நால்வரில் ஒருவர் மட்டுமே தமக்கு நடந்தது பற்றி புகாரளித்ததும் தெரியவந்துள்ளது.
புகாரளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட சிலர், பெரும்பாலான நேரங்களில் புகாரளித்த பிறகு பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினர்.
தங்கள் அனுபவங்கள் சட்ட நடவடிக்கைக்குப் போதுமானதாக இல்லை என்று கவலைப்படுவதாகவும் இது நீண்ட நேரம் எடுக்கும் என்று உணர்ந்ததாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
“இணையத் தீங்கால் பாதிக்கப்படுவோருக்கு இதர உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு பதிலாக குற்றவாளியை விரைவாகக் கண்டுபிடித்து தண்டனை விதிப்பதைத்தான் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என்று ‘ஷி’ அமைப்பின் தலைவர் ஸ்டெஃபனி யூஎன் தியோ சொன்னார்.
தற்போது அத்தகைய பாதிப்புகளுக்கு ஆளானோருக்கு ஆதரவளிக்க சீரான உதவிமுறை இல்லை எனக் குறிப்பிட்ட திருவாட்டி ஸ்டெஃபனி, பாதிக்கப்படுவர்கள் உதவி நாட எங்குச் செல்ல வேண்டுமென்று தெரியாமல் தவிப்பதாகவும் சொன்னார்.