‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து ‘எஸ்ஜி எனேபல்’ எனும் உடற்குறையுள்ளோருக்கான நல்வாழ்வு நிலையம் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 6), நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திரு எரிக் இதனைத் தெரிவித்தார்.
அதிகத் தேவையுடைய, உடற்குறையுள்ள பட்டதாரிகளுக்குக் கைகொடுக்க மைய அடிப்படையிலான சேவைகள் ஏதுவாக உள்ளன.
இதை விரிவுபடுத்தச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2030க்குள், கூடுதலாக 500 பகல்நேர நடவடிக்கை நிலையங்களையும் உடற்குறையுள்ளோருக்கான 500 அடைக்கலப் பயிலரங்குகளையும் சேர்க்கவுள்ளது.
பகல்நேர நடவடிக்கை நிலையங்கள் அதிக ஆதரவு தேவைப்படும் உடற்குறையுள்ளோருக்குச் சமூக, பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் அன்றாட வாழ்க்கை, சமூக வாழ்வியல் திறன்களுக்கான பயிற்சியையும் நடத்தி வருகின்றன.
‘எனேபெல்ட் லிவிங்’ திட்டத்தின்கீழ், தகுதிபெறும் உடற்குறையுள்ளோர் அதற்கென ஒதுக்கப்பட்ட பொது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
மேலும், தொடர்ந்து நலம் விசாரிப்பது அல்லது அன்றாட வாழ்க்கைத் திறன்களுக்கான பயிற்சி அளிப்பது போன்ற ஆதரவுகளை நியமிக்கப்பட்ட சேவை வழங்குநர்களிடமிருந்து அவர்கள் பெறுகின்றனர்.
நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கவனிப்பை வழங்கக் குடும்பத்தினரால் முடியாத நிலையில், எனேபெல்ட் லிவிங் திட்டத்தின் தளங்களுக்கு அருகே தங்கள் சொந்த வீடுகளில் தனியாகவோ குடும்பத்தினருடனோ வசிக்கும் உடற்குறையுள்ளோர்க்கு இதேபோன்ற ஆதரவுச் சேவைகளை நேரடியாக வழங்குவதற்கு அமைச்சு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ‘இல்ல ஆதரவுத்’ திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து குடியிருப்பு, சமூக உடற்குறையுள்ளோர் சேவைகளுக்கான மானியங்களை முறையே 15 விழுக்காடு, 10 விழுக்காடு வரை அமைச்சு அதிகரிக்கும்.
உடற்குறையுள்ளோரின் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில், மானியங்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டு $3,601 முதல் $4,800 வரை தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் இத்தகுதி விரிவுபடுத்தப்படும்.
சென்ற ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்ததுபோலச் சிறப்புத் தேவையுடையோர்க்கான அறங்காவல் கணக்கை (Special needs Trust Company account) நிரப்ப வெள்ளிக்கு வெள்ளி எனும் அடிப்படையிலான இணை மானியத்தைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிமுகப்படுத்தும்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2031ஆம் ஆண்டு மார்ச் வரை, $3,600 வரை தனிநபர் வருமானம் கொண்ட குடும்பங்கள், தங்களின் சிறப்புத் தேவையுடையோர்க்கான அறங்காவல் கணக்கில் $10,000 வரையிலான நிரப்புதொகைகளைப் பெறுவதற்குப் பதிவு செய்துகொள்ளலாம்.

