ஆட்குறைப்பால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தர வேண்டும்: டெஸ்மண்ட் சூ

ஆட்குறைப்பால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கூடுதல் ஆதரவு தர வேண்டும்: டெஸ்மண்ட் சூ

2 mins read
db206ff7-cd17-40e5-9c89-7560d040523d
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின்(என்டியுசி) துணைப் பொதுச் செயலாளர் டெஸ்மண்ட் சூ (நடுவில்), துணை அமைச்சர் கோ பெய் மிங் (வலது) e2i நிலையத்திற்குச் சென்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு விரைவாகவும் வேகமாகவும் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொருளியல் உத்திக்கான மறுஆய்வுக் குழுவின் இணைத் தலைவர் டெஸ்மண்ட் சூ தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும் அணுகுமுறையை மேலும் சிறப்பான முறையில் கையாள மறுஆய்வுக் குழு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) துணைப் பொதுச் செயலாளருமான திரு டெஸ்மண்ட் சூ, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்தின் (e2i) தொழில் மையத்திற்குச் சென்றார். அப்போது இக்கருத்தை அவர் சொன்னார்.

தற்போது சிங்கப்பூரில் பல நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டு அணுகுமுறையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால் அவ்வப்போது ஆட்குறைப்பு நடக்கிறது.

மனிதவள அமைச்சின் அண்மைய ஆய்வுப்படி 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 11,000 சிங்கப்பூரர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ e2i கழகத்தை அணுக வேண்டும் என்றும் நினைவூட்டப்பட்டது. ஆட்குறைப்பு செய்யப்பட்டும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும் என்று திரு டெஸ்மண்ட் சூ குறிப்பிட்டார். சிறப்பான உதவி நடவடிக்கைகளையும் ஆதரவு திட்டங்களையும் செய்வதன் மூலம் பாதிக்கப்படும் நபர் விரைவாக ஊழியரணிக்குத் திரும்ப முடியும் என்றார் அவர்.

நிறுவனங்களுக்கு ஆதரவு

“அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நிறுவனங்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும், அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது,” என்றார் திரு டெஸ்மண்ட் சூ.

“நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைப்பதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வெளிநாடுகளிலும் அவை கால் பதிக்கலாம்,” என்றார் அவர்.

e2i நிலையத்திற்கு உள்துறை மற்றும் சமூதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங்கும் சென்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்