கிராப் நிறுவனம் தனது சேவைகளுக்கான கட்டணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களைக் கூடுதல் காலத்துக்குச் செயல்படுத்தவிருக்கிறது.
அதன்படி, வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை மாற்றங்கள் நடப்பில் இருக்கும். வாகன எரிசக்திப் பயன்பாட்டுக்கான கூடுதல் கட்டணம், கிராப் டாக்சி சேவைகளுக்கான மீட்டர் கட்டணம் அதிகரிப்பு ஆகியவை மாற்றங்களில் அடங்கும்.
எரிசக்தி விலை அதிகமாக இருந்துவரும் நிலையில் ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக கிராப் வெள்ளிக்கிழமை (மே 22) அறிக்கை மூலம் தெரிவித்தது.
கிராப் சேவைக் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று முதலில் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது. மே 31ஆம் தேதி வரை கட்டண மாற்றம் நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
டாக்சிகளைப் பொறுத்தவரை, வாகனம் காத்திருக்கும் ஒவ்வொரு 45 நொடிகளுக்கும், ஒன்றிலிருந்து 10 கிலோமீட்டர் வரையிலான பயணத்துக்கு ஒவ்வொரு 400 மீட்டர் தூரத்துக்கும், கட்டணம் 26லிருந்து 27 காசுக்கு உயர்த்தப்படும் என்றும் 10 கிலோமீட்டரைத் தாண்டிய பிறகு ஒவ்வொரு 350 மீட்டருக்கும் கட்டணம் 26லிருந்து 27 காசுக்கு உயர்த்தப்படும் என்றும் கிராப் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. இந்த மாற்றம் மார்ச் 30ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
மேலும், தங்களின் வாகனச் சேவைகளுக்கான எரிசக்திக் கட்டணம் ஏப்ரல் ஏழாம் தேதி முதல் 50லிருந்து 90 காசுக்கு உயர்த்தப்படும் என்றும் கிராப் மார்ச் 31ஆம் தேதி அறிவித்தது. இது, அதன் டாக்சி சேவைகளுக்குப் பதிவுசெய்வோருக்குப் பொருந்தாது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து உலகளவில் எரிபொருள் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் இடையூறுகள் அதிகம் ஏற்பட்டது அதற்கு முக்கியக் காரணமாகும்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய், எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டுசெல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு உக்ரேன் போர் மூண்டபோது அதுவரை காணப்படாத அளவு எரிபொருள் விலை அதிகமாகப் பதிவானது. இப்போது, ஈரான் போர் மூண்டதையடுத்து எரிபொருள் விலை அதையும் தாண்டிவிட்டது.

