தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் வேலை, பராமரிப்பு ஆதரவு

3 mins read
648a2100-bd6f-485b-ad0c-cfe0d11c56f1
பட்ஜெட் 2025 மூலம் உடற்குறையுள்ளோருக்கு வேலைச் சந்தையில் கூடுதல் ஆதரவு வழங்கப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடற்குறையுள்ளோர் (உடல் ரீதியாகக் குறைபாடுடையோரும் சிறப்புத் தேவைகள் கொண்டவர்களும்) 18 வயதில் சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் படிப்பை முடித்ததும் வேலை பெற கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளது.

உடற்குறையுள்ளோருக்கான சம்பளத்தை ஈடுகட்ட நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் 2025 வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் உடற்குறையுள்ளோருக்கான வேலை நியமன உதவித்தொகை (Enabling Employment Credit) 2028 இறுதிக்கு நீட்டிக்கப்படுகிறது. இத்தொகை அறிமுகமானபோது 2021 முதல் 2025 வரையே திட்டமிடப்பட்டது.

$4,000க்கும் குறைவான மாத வருமானம் ஈட்டும் உடற்குறையுள்ளோரின் சம்பளத்தில் 20% வரை (மாதத்துக்கு அதிகபட்சம் $400) இத்தொகை ஈடுகட்டுகிறது.

குறைந்தது ஆறு மாதங்கள் வேலையின்றி இருக்கும் உடற்குறையுள்ளோரைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 20 விழுக்காட்டை ஈடுகட்டும் (மாதத்துக்கு அதிகபட்சம் $400) நிதியாதரவும் முதல் ஒன்பது மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

படிப்புக்குப் பின் வேலை குறித்து கூடுதல் ஆய்வு

பல பெற்றோரும் தம் பிள்ளைகள் 18 வயதை எட்டியதும், சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் என்ன செய்வார்கள் என்று கவலைப்படுவதாக பிரதமர் வோங் கூறினார்.

வேலைக்குச் செல்லும் உடற்குறையுள்ளோர், புதிய வேலைச் சூழலுக்குப் பழக கூடுதல் ஆதரவு தேவைப்படும் என்ற அவர், ‘எஸ்ஜி எனேபல்’ வழங்கும் ‘மாணவரிலிருந்து ஊழியராக மேம்படும் திட்டம்’ வழி பயனடைந்த ‌‌ஷர்லின் லீயின் அனுபவத்தைப் பகிர்ந்தார். செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் பள்ளியில் படித்துமுடித்த அவருக்கு, அத்திட்டம்வழி லீ ஆ மூய் முதியோர் இல்லத்தில் நிர்வாக உதவியாளராக ஒன்பது மாதம் பயிற்சி பெற்றபின், முழுநேர வேலை கிடைத்தது.

பள்ளிப் படிப்பை முடித்தபின்பும் வரையறுக்கப்பட்ட சூழல் தேவைப்படுவோருக்கும் கூடுதல் உதவி வழங்கப்படும். சில ஆண்டுகள் நீடிக்கும் முயற்சியாக இது குறித்து பங்காளிகளுடன் ஆராயப்படும் என்றும், அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு குறித்த கலந்துரையாடல்களில் கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் என்றும் திரு வோங் கூறினார்.

ஓய்வுக்காலச் சேமிப்புக்குக் கூடுதல் உதவி

வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான ஓய்வுக்காலச் சேமிப்புத் திட்டம் (Matched Retirement Savings Scheme), தகுதிபெறும் உடற்குறையுள்ள அனைத்து வயது சிங்கப்பூரர்களுக்கும் விரிவாக்கப்படும்.

தற்போது இத்திட்டம், முதியோரின் மத்திய சேமநிதி ஓய்வுக் கணக்குகளுக்குச் செய்யப்பட்ட தொகை நிரப்புகளுக்கு ஈடாக வெள்ளிக்கு வெள்ளி (ஆண்டுக்கு அதிகபட்சம் $2,000) நிரப்புகிறது.

வருங்காலப் பராமரிப்புக்குக் கூடுதல் உதவி

உடற்குறையுள்ளோரின் வருங்காலப் பராமரிப்புக்கும் அரசாங்கம் கூடுதல் உதவி வழங்கும்.

தற்போது, சிறப்புத் தேவையுடையோருக்கான அறக்கட்டளை நிறுவனத்தின் (Special Needs Trust Company) அறக்கட்டளைக் கணக்குகளில் பராமரிப்பாளர்கள் நிதித் திட்டத்தைத் தொடங்கலாம், பணம் நிரப்பலாம். பராமரிப்பாளர் இறந்துபோனால், அவர்களின் பராமரிப்பின்கீழ் இருந்த உடற்குறையுள்ளோருக்காக அந்நிறுவனம் அப்பணத்தை நிர்வகிக்கும்.

இனி இக்கணக்குகளில் தொகை நிரப்பும் குறைந்த, நடுத்தர வருமானப் பராமரிப்பாளர்கள், வெள்ளிக்கு வெள்ளி ஈடாகப் பணம் நிரப்பும் மானியம் மூலம் $10,000 வரையில் பயன்பெறலாம்.

பராமரிப்பு மானியங்கள் அதிகரிப்பு

வரும் 2026 ஏப்ரல் மாதம் முதல் மேம்படுத்தப்பட்ட இல்லப் பராமரிப்பு மானியம் மூலம் அன்றாடப் பராமரிப்புச் செலவுகளுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான சேவைகளுக்கும் தாதிமை இல்ல/ சொந்த இல்ல/ சமூகப் பராமரிப்புக்கும் அதிகபட்சம் 15 விகிதப் புள்ளிகள் (percentage points) வரை கூடுதல் மானியங்கள் வழங்கப்படும்.

1969 அல்லது அதற்கு முன்பு பிறந்த சிங்கப்பூரர்களுக்கு 5 முதல் 15 விகிதப் புள்ளிகள் வரை, கூடுதல் நெடுங்காலப் பராமரிப்பு மானியங்களும் வழங்கப்படும்.

மூத்தோர் நடமாட, இயங்க உதவிநிதியின்கீழ் வழங்கப்படும் மானியங்களும் அதிகரிக்கப்படுகிறது.

இம்மானியங்களுக்குத் தகுதிபெறுவதற்கான தனிநபர் வீட்டு வருமான வரம்பு $4,800 ஆக அதிகரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்