கார் பந்தய வட்டாரத்தில் ஆகாயவெளி நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை

1 mins read
f5aa8294-73da-4417-ac09-6a6d14a1517d
ஆளில்லா வானூர்தி உள்ளிட்டவற்றை கார் பந்தய வட்டாரத்தில் பறக்க விடக்கூடாது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் கார் பந்தயம் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஆகாயவெளி நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளில்லா வானூர்தி, பட்டம், பலூன்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த அந்த நாள்களில் தடை செய்யப்படுகிறது.

ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தைப் படம் பிடிக்க ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறக்கும் என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் அந்தத் தடை விதிக்கப்படுவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தெரிவித்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பொறுப்பேற்று நடத்தும் இரவுநேர கார் பந்தயம் செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெற உள்ளது.

ஆகாயவெளி நடவடிக்கைகள் மரினா பே சேண்ட்ஸ், லிட்டில் இந்தியா, காலாங் ஆறு, மரினா அணைகரை, தியோங் பாரு ஆகிய வட்டாரங்களில் தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தரையிலிருந்து ஆகாயத்தில் 4,000 அடி (1,220 மீட்டர்) வரை எந்தவொரு பறக்கும் சாதனத்தையும் அந்த வட்டாரங்களில் பயன்படுத்தக் கூடாது என்பது தடை.

செப்டம்பர் 19 பிற்பகல் 2.30 மணி முதல் செப்டம்பர் 23 அதிகாலை 1.30 மணி வரை கட்டம் கட்டமாக தடை நடப்பில் இருக்கும். தடை பற்றிய கூடுதல் தகவல்களை www.singaporegp.sg என்னும் இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்