தற்காலத்திலும் எதிர்காலத்திலும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திறன்களுக்கும் வேலை தேடுவோர் கல்வி நிலையங்களில் பயிலும் திறன்களுக்கும் இடையிலான பொருத்தமின்மை என்பது பொருளியலுக்கு அப்பாற்பட்டும் சிக்கல் விளைவிக்கிறது.
இது புரையோடிப்போனால், நீண்டகால அடிப்படையில் கல்வி, சமூக ஆதரவுக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும். தங்கள் முயற்சி, செலவு எல்லாமே விழலுக்கு இறைத்த நீரானதாக மக்கள் கருதக்கூடும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம், ஜனவரி 22ஆம் தேதி கூறியுள்ளார்.
உயர்கல்வியை முடித்த பிறகும் வேலை கிடைக்காவிட்டால் இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கலந்தாலோசனைக் கூட்டம் ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
‘பிசினஸ் இன்சைடர்’ செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஜேமி ஹெல்லர் வழிநடத்திய அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு மன்றத்துக்கான தொழிற்சங்க ஆலோசனைக் குழுவின் தலைமைச் செயலாளர் வெரோனிகா நில்சன், ‘அடெக்கோ’ குழுமத்தின் மனிதவளச் சேவைப் பிரிவுக்கான தலைமை நிர்வாகி டெனிஸ் மச்சுவோல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்வலர்கள், வர்த்தகத் தலைவர்கள் போன்றோர் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
“ஒரு தலைமுறை முழுவதுமே, நடப்பிலுள்ள செயல்முறையால் தாங்கள் தோற்றுப்போனதாக உணரக்கூடிய சிக்கல் உருவாகும்,” என்று எடுத்துரைத்தார் அதிபர் தர்மன்.
இதைச் சரிசெய்வதற்கான மாற்றங்களில் உயர்கல்வி விரிவாக்கத்தின்போது, மிக அதிகமாக ஏட்டுக் கல்வியைச் சார்ந்திருக்கும் போக்கை மாற்றுவதும் அடங்கும். சிங்கப்பூரையும் ‘நார்டிக்’ நாடுகள் எனப்படும் வட ஐரோப்பிய நாடுகளில் ஒருசிலவற்றையும் தவிரப் பெரும்பாலான நாடுகள் ஏட்டுக் கல்வியை அதிகம் சார்ந்திருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தால் தொழில்நுட்பத் திறன்கள் அல்லது வேலையில் கற்றுக்கொள்ளும் திறன்களைவிட ஏட்டுக்கல்வித் திறன்கள் மேலானவையாகக் கருதப்படுகின்றன. இதனால்தான் வேலைக்கும் திறனுக்கும் பொருத்தமின்மை ஏற்படுகிறது என்றார் திரு தர்மன்.
வளரும் நாடுகளில் போதிய எண்ணிக்கையில் வேலைகள் உருவாக்கப்படாவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய சமூக-அரசியல் பின்விளைவுகள் புதிய அனைத்துலகச் சீர்கேட்டுக்கு வித்திடும் சாத்தியத்தை அவர் சுட்டினார்.

