சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) மருத்துவக் கல்லூரியின் இளநிலைப் பட்டப்படிப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் சென்ற ஆண்டு (2024) அங்கு ஆக அதிக எண்ணிக்கையில் மாணவிகள் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கை குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, 2024ஆம் ஆண்டு யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 286 மாணவர்கள் சேர்ந்தனர் என்றும் அவர்களில் 173 பேர் பெண்கள் என்றும் அக்கல்லூரி கூறியது.
மேலும், 2024ன் மொத்த மாணவர் சேர்க்கையில் அது 60 விழுக்காடு எனவும் அது தெரிவித்தது.
கடந்த ஆண்டுகளில் அக்கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கைகளை ஒப்பிட்டுப் பார்க்குபோது இதுவே ஆக அதிகம் என்றது யோங் லூ லின் மருத்துவக் கல்லூரி.
குறிப்பாக, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண்கள் எனச் சில ஆண்டுகளாகத் தொடரும் சமூகப் போக்கோடு இது ஒத்துப்போகிறது என்றும் அது சொன்னது.
மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பை வழங்கும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆண்டில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்ததாகவும் 186 இடங்களுக்கு நடந்த மாணவர் சேர்க்கையில் 50 விழுக்காட்டு இடங்களை மாணவிகள் தட்டிச்சென்றதாகவும் கூறப்பட்டது.
மாணவிகள் பேரளவில் மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தது குறித்து என்யுஎஸ் மருத்துவக் கல்லூரித் தலைவரான பேராசிரியர் சோங் யாப் செங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மாணவர்கள் எந்தக் கல்வி நிலையத்திலிருந்து வந்தாலும் அவர்களின் தனிப்பட்ட கல்வித் தகுதிகள், நன்னடத்தை, மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியில் எத்தனை மாணவர்கள் அல்லது மாணவிகள் சேரவேண்டும் என்ற எண்ணிக்கை வரையறையைப் பல்கலைக்கழகம் வகுக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“சிறந்த மருத்துவர்களாக விளங்குவதற்கு ஏற்ற திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கல்லூரியின் கவனம் இருக்கிறது. நேர்காணல்கள், பிற தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் பட்டியலிடப்படுகின்றனர். அவர்களில் சிறப்பானவர்களைக் கல்லூரி தேர்ந்தெடுக்கின்றது,” என்று கூறிய பேராசிரியர் சோங் மாணவர் சேர்க்கையில் எந்தவொரு பாரபட்சமும் காட்டப்படவில்லை என்பதையும் விளக்கினார்.