உள்துறைக் குழு பயிற்சிக்கழகம் புதிய அம்சங்களுடன் அதன் பயிற்சி வசதிகளை மேம்படுத்துகிறது.
துப்பாக்கிச்சுடும் பயிற்சிகளை மேற்கொள்ள மெய்நிகர் கூடம், மிகை மெய், மெய்நிகர் தொழில்நுட்பத் திறன்கள் கொண்ட பயிற்சிக் கூடம் ஆகியவற்றை உள்துறைக் குழு பயிற்சிக்கழகம் கொண்டிருக்கும்.
இவ்வாண்டு தனது 20ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் உள்துறைக் குழு பயிற்சிக்கழகம், அதிகாரிகளின் பயிற்சிகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தவிருக்கிறது.
சிங்கப்பூர்க் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, உள்துறைப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மேம்பட்ட பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவாக மாறிவரும், சவால்கள் நிறைந்த சூழலில் செயல்பட அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த புதிய பயிற்சித் திட்டங்கள் கைகொடுக்கும் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற உள்துறைக் குழு பயிற்சிக்கழகத்தின் பணித்திட்ட கருத்தரங்கில் திரு டோங் விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“அச்சுறுத்தல்கள் இன்னும் மின்னிலக்க முறையில் எல்லைத் தாண்டி விரைவாக உள்ளன,” என்று அவர் கூறினார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்துவிட்டதாக கூறிய திரு டோங், அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதைத் தொழில்நுட்பம் மாற்றுகிறது என்றார்.
எனவே, பயிற்சிகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்கும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கும் உருமாறும் அச்சுறுத்தல்களுக்கும் ஏற்றவாறு உள்துறைக் குழு தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.
துப்பாக்கிச்சுடும் பயிற்சிகளுக்கான மெய்நிகர் கூடம், நெருக்கடியான சூழலில் சுடுவதா வேண்டாமா என்ற முடிவை எடுக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும்.
உண்மையான சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகளையும் அதிகாரிகள் தொடர்ந்து பெற புதிய அம்சங்கள் வாய்ப்பளிக்கின்றன.


