உரிமம் இல்லாமல் கடன்கொடுபவர்களிடம் $20,000 கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் போனதால் அவர்கள் சார்பாகக் குறுஞ்செய்தி விளம்பரங்களை அனுப்பிய ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் கடன்கொடுப்பவர்கள் சார்பாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று சிம் குவோ லியாங் 173,000க்கும் அதிகமான குறுஞ்செய்தி விளம்பரங்களை அனுப்பிவைத்தார்.
ஃபிலிக்ஸ் சான் சி ஹாவ், சேமுவல் டான் சி லே ஆகிய இரு ஆடவர்களுடன் இணைந்து, அதே மாதம் மேலும் சுமார் 144,000 குறுஞ்செய்தி விளம்பரங்களை சிம் அனுப்பியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
27 வயது சிம்முக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை, $90,000 அபராதம் ஆகியவை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அபராதத் தொகையை அவர் செலுத்தாவிடில் அவருக்குக் கூடுதலாக ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
டானுக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனையும் $30,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
25 வயது சான் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

