அரசாங்க அலுவலகங்களிலும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தெந்த இடங்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சிக்கனமாக பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசியச் சுற்றுப்புற வாரியமும் இணைந்து புதன்கிழமை (ஏப்ரல் 8) கூட்டறிக்கை வெளியிட்டது.
குளிரூட்டியை 25 அல்லது அதற்குமேல் வெப்பநிலையில் வைப்பது, அவசியமற்ற மின்கருவிகளைப் பயன்படுத்தாதபோது அதன் மின்னிணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லாதபோது குளிரூட்டி, விளக்குகள், கணினித் திரைகளை அணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
எல்லா அமைச்சுகளும், துறைகளும், அரசாங்கம் சார்ந்த அமைப்புகளும் உடனடியாக அறிக்கையில் சுட்டிக்காட்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அலுவலகங்களில் குளிரூட்டி, விளக்குகள், மின்தூக்கி போன்றவைகளை சரியாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அரசாங்க அமைப்புகள் மின்சாரத்தைக் குறைவாக எடுத்துக்கொள்ளும் விளக்குகள், திறன்உணர்விகள் (smart sensors) உள்ளிட்ட மின்கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகளையும் வேகப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“எரிசக்தியைச் சேமிப்பதில் அரசாங்கம் தனது பங்களிப்பை முன்னின்று செய்து வருகிறது. எரிசக்தியைச் சேமிக்க உதவும் ஆதரவுத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசாங்க அலுவலகம் போலவே நிறுவனங்கள், குடும்பங்கள், தனிமனிதர்கள் மின்சாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைவூட்டப்பட்டது. முடிந்தவரை பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அண்மையில் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் மத்திய கிழக்குப் பதற்றம் குறித்துப் பேசியிருந்தார். “நிலைமை மோசமானால் பல துறைகள் சிக்கல்களை எதிர்நோக்கும், அது மின்சாரம் மற்றும் உணவுப் பொருள்கள் விலையை அதிகரிக்கும். அதனால் சிங்கப்பூரர்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அரசாங்கம் அமல்படுத்துமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, “சிங்கப்பூரின் எரிபொருள் விநியோகம் நிலையாகவும் உறுதியாகவும் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வைக் காரணமாக வைத்து வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்த எந்தத் திட்டமும் இல்லை,” என்று தெரிவித்துள்ளது.

