சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் உள்ள குளம் ஒன்றில் திருக்கை மீன்வகை ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டது.
ஜனவரி 19ஆம் தேதி அந்த மீனைக் கண்ட திரு யோங் வாய் காய், 61, அதைப் படமெடுத்து ‘சிங்கப்பூர் வைல்ட்லைஃப் சைட்டிங்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
“வைர வடிவிலான மீன் ஒன்று குளத்தின் மேற்பரப்புக்குச் சற்று அடியில் நேர்கோட்டில் செல்வதைக் கவனித்தேன். பின்னர் அது ஆழமாகச் சென்றது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் கூறினார்.
அந்தக் குளத்தில் யாரோ ஒருவர் அந்தத் திருக்கை மீனை வைத்திருக்கக்கூடும் என தாம் சந்தேகிப்பதாக திரு யோங் சொன்னார்.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேசிய பூங்காக் கழகத்தின் பூங்காக்கள் மத்தியக் குழு இயக்குநர் டான் ஜுன் சாவ், திருக்கை மீன் கண்டறியப்பட்டது குறித்து கழகத்தின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும் நிலவரத்தை அது கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“தங்களின் சொந்த பாதுகாப்புக்காக பொதுமக்கள் அந்தக் குளத்தில் மீன்பிடிக்கவோ அதில் இறங்கவோ கூடாது,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

