'செயில்ஜிபி' சிங்கப்பூர் பாய்மரப் படகோட்டம் 2023, இம்மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இதனை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் பட்டம், பலூன், ஆளில்லா வானூர்தி ஆகியவற்றைப் பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டும் போட்டியைப் படம் எடுப்பதற்காக ஹெலிகாப்டர்கள் தாழப் பறப்பதற்கு உதவவும் இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தற்காலிகக் கட்டுப்பாட்டு வட்டாரத்தில் இம்மாதம் 12ஆம் தேதி முற்பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் 13ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 14, 15ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்தத் தடை அமலில் இருக்கும்.
தடை விதிக்கப்பட்ட நேரங்களில் கடல் மட்டத்திலிருந்து 1,219 மீட்டர் உயரம் வரை பட்டம், பலூன், ஆளில்லா வானூர்தி ஆகியவற்றைப் பறக்க விடக் கூடாது.
ஆணையத்தின் அனுமதியின்றி அவற்றைத் தற்காலிகக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பறக்கவிடுவது குற்றமாகும்.
தடையை மீறியது நிரூபிக்கப்பட்டால், முதல்முறை குற்றம் செய்தோருக்கு $20,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட முறை குற்றம் செய்தோருக்கு $40,000 வரையிலான அபராதமோ 15 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

