சிங்கப்பூர் - மலேசியா இடையே பேருந்துச் சேவை வழங்கிவந்த தனியார் நிறுவனமான ‘ஏரோலைன்’, நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை தனது அனைத்துப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பைத் தனது இணையப்பக்கத்திலும் சமூக ஊடகங்களிலும் மலேசியாவில் செயல்பட்டு வரும் அந்நிறுவனம் சனிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்டது.
மேலும், மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவின் பேரில் பேருந்துச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அது சொன்னது.
பயணிகளை மத்திய பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இறக்கிவிடுவதற்குப் பதிலாக அவர்களை அந்நிறுவனம் தேர்வுசெய்த வேறு இடத்தில் இறக்கிவிட்டதால் இந்தத் தற்காலிகத் தடை பிறப்பிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
தடை உத்தரவு அமலில் இருப்பதால், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் பயணங்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் அல்லது வேறு தேதியில் பயணம் மேற்கொள்ளும் வகையில் தங்கள் பயணச்சீட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அது குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை நவம்பர் 22ஆம் தேதி தொடங்குவதால், அந்நாட்டுப் பயணிகள் சிலரைப் பாதிக்கக்கூடிய இந்தத் தற்காலிகத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அது கூறியது.
மத்தியப் பேருந்துச் சந்திப்பு நிலையம் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரின் மையப் பகுதியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ‘ஏரோலைன்’ நிறுவனம் பயணிகளை இறக்கிவிடும் இடம் எனக் குறிப்பிட்ட பகுதி அனைத்து இடங்களுக்கும் செல்ல வசதியானது என அந்நிறுவனத்தின் தரப்பு தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
எதுவாயினும், பயணிகளைப் பேருந்துகளில் ஏற்றவும் இறக்கி விடவும் அரசாங்கம் அனுமதித்துள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீறும் பேருந்து நிறுவனங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவை மீறும் நிறுவனங்களின் உரிமம் பறிக்கப்படும் என்றும் மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

