சிங்கப்பூர் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு நல்ல இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பொது வீடமைப்பு கட்டுப்படியாகும் விலையில் வைக்கப்படும் என்றும் பொதுப் போக்குவரத்து முறை மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, 2030களின் பிற்பகுதியிலும் 2040களின் முற்பகுதியிலும் அடுத்த ரயில் விரிவாக்கத் திட்டத்தில் ஜூரோங் வட்டாரப் பாதையின் வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்பு, சிலேத்தார் மற்றும் தெங்கா பாதைகளும் அடங்கும்.
பருவநிலை மாற்றம் போன்ற எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள, சிங்கப்பூரின் முதல் தேசிய தகவமைப்புத் திட்டத்திலும் செயல்பட்டு வருவதாக, அரசாங்கம் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) கூறியது.
இவை, தேசிய வளர்ச்சி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு ஆகியவற்றின் எதிர்வரும் திட்டங்களின் ஒரு பகுதியாகும். நாடாளுமன்றத் தொடக்க நிகழ்வில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஆற்றிய உரையுடன் அமைச்சுகளின் பிற்சேர்க்கை வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 18) வெளியிடப்பட்டன.
தேசிய வளர்ச்சி அமைச்சு
பல்வேறு வட்டாரங்களில் ‘பிடிஓ’ அடுக்குமாடி வீடுகள் அதிக அளவில் வழங்கப்படுவதன் மூலம், பொது வீடமைப்பு கட்டுப்படியான விலையிலும், அணுகக்கூடியதாகவும் வைக்கப்படும். இதில் குறைந்த காத்திருப்பு நேரங்கள் கொண்டவையும் அடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். தனியார் வீடமைப்புக்கு வலுவான நில விநியோகம் அமைவதையும் தமது அமைச்சு உறுதி செய்யும் என்றும் திரு சீ தெரிவித்தார்.
பொது வீடமைப்புக்கான வருமான உச்சவரம்பை, தேசிய வளர்ச்சி அமைச்சு மதிப்பாய்வு செய்யும். மேலும் ஒற்றையர், மூத்த குடிமக்கள் மற்றும் பெரிய குடும்பங்கள் உட்பட கூடுதல் வீட்டுத் தெரிவுகளை எவ்வாறு வழங்குவது என்பதை அமைச்சு ஆய்வு செய்யும்.
போக்குவரத்து அமைச்சு
சாங்கி விமான நிலைய 5ஆம் முனையம், விமான இணைப்பை வலுப்படுத்தும், உலகளாவிய விமான நடுவமாக சாங்கியின் நிலையை வலுப்படுத்தும் என்று போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் கூறினார்.
புதிய சாங்கி ஈஸ்ட் தொழில்துறை மண்டலம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான சரக்கு மையத்துடன் விமான சரக்கு கையாளும் திறனும் அதிகரிக்கும். கூடுதலாக, போக்குவரத்து அமைச்சு சாங்கி ஈஸ்ட் நகர்ப்புற மாவட்டத்தை உருவாக்கும். இது 5வது முனையத்தில் ஒரு புதிய வாழ்க்கைப்பாணி, வணிக மையமாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
துவாஸ் துறைமுகத்தில் துறைமுக வசதிகளைப் போக்குவரத்து அமைச்சு ஒருங்கிணைக்கும். நகர்ப்புற மேம்பாடு மற்றும் பசுமை இடங்களுக்காக நகர மையத்தில் நிலத்தை விடுவிக்கும். 2040களில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்போது, துவாஸ் துறைமுகம் தானியங்கிமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆதரவோடு 24 மணி நேரமும் இயங்கும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு
அதிகரித்து வரும் கடல் நீர்மட்டங்களுக்குத் தயாராவதற்கு, கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டு வர, சிங்கப்பூரின் கடற்கரை முழுவதும் தளம் சார்ந்த ஆய்வுகளை தமது அமைச்சு மேற்கொண்டு வருவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
உலகளாவிய தொழில்துறைத் தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதோடு, கடலோரப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆராய்ச்சியையும் அமைச்சு தொடரும்.
பொருளியல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, 2065ஆம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான தேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதால், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நீண்ட காலத் திட்டங்களைத் தொடர்ந்து திட்டமிட்டு சிங்கப்பூரின் நீர் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும்.
விரயப் பொருள்கள் வீசப்படுவதைக் குறைத்தல், மறுசுழற்சி செய்வதை மேம்படுத்துதல், எஞ்சிய விரயப்பொருள்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளை ஆராய்வது ஆகியவற்றில் அமைச்சு தொழில்துறையுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.