ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்றால் சிங்கப்பூரில் இறைச்சிக்குப் பாதிப்பில்லை: அதிகாரிகள்

1 mins read
ஸ்பெயினில் பன்றிகளுக்கிடையே ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது
0b9cad8c-2fbd-4a8a-82a8-4041e8c91ff0
2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஸ்பெயின் பண்ணை ஒன்றில் பன்றிகள். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஸ்பெயினிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சியை வாங்குவதை சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் தவிர்க்கத் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்பெயினில் பன்றிகளுக்கிடையே ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகும் பன்றி இறைச்சி அந்தத் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பார்சலோனா நகரில் தற்போது இடம்பெற்றுள்ள ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று, பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளைப் பாதித்திருப்பதாகத் தகவல் இல்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பும் விலங்குநல மருத்துவச் சேவையும் புதன்கிழமை (டிசம்பர் 3) கூட்டறிக்கையில் குறிப்பிட்டன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு இரு அமைப்புகளும் பதிலளித்தன.

ஸ்பெயினிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி, அது சம்பந்தப்பட்ட பொருள்கள் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட இரு அமைப்புகளும், “எனினும், ஸ்பெயினிலிருந்து சிங்கப்பூருக்குப் பன்றி இறைச்சியை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தன. இதுகுறித்து சிங்கப்பூர், ஸ்பெயின் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவை கூறின.

ஸ்பெயின், ஆக அதிக அளவில் பன்றி இறைச்சியை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய ஒன்றிய நாடாகும்.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல் ஏற்பட்டால் நிலைமையைக் கையாள ஸ்பெயினுடன் தங்களுக்கு ஓர் ஒப்பந்தம் இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் விலங்குநல மருத்துவச் சேவையும் தெரிவித்தன. அதன்படி, பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் பாதிக்கப்படாவிட்டால் ஸ்பெயினிலிருந்து பன்றி இறக்குமதி தொடரும்.

குறிப்புச் சொற்கள்