புதுப்பிப்புக்குப் பிறகு அங் மோ கியோ சந்தை, உணவு நிலையம் மீண்டும் திறப்பு

புதுப்பிப்புக்குப் பிறகு அங் மோ கியோ சந்தை, உணவு நிலையம் மீண்டும் திறப்பு

2 mins read
cbed6004-2528-432b-8e67-2b6019113866
அங் மோ கியோ நகர மன்றத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ‘லிட்டில் ரெட் பாட்’ எனும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தானியக்கத் துப்புரவு இயந்திரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இரண்டு மாத கால புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு, புளோக் 409 அங் மோ கியோ சந்தை, உணவு நிலையம் அதிகாரபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) மீண்டும் திறக்கப்பட்டது.

சிங்கப்பூரின் 61வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மறுதிறப்பு விழாவில், மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நதியா அகமது சம்தீனும் கலந்துகொண்டனர்.

கடந்த ஜூன் 8 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்ற இந்த மேம்பாட்டுப் பணிகளின்மூலம் புதிய மேசைகள், நாற்காலிகள், காற்றோட்டத்தை அதிகரிக்க கூடுதல் மின்விசிறிகள், புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்துத் தரப்பட்டதாக அங் மோ கியோ நகர மன்றம் தெரிவித்தது.

குறைந்த எரிசக்தியைப் பயன்படுத்தும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு, பறவைகளால் ஏற்படும் தொந்தரவைக் குறைக்க கூடுதல் பறவைத் தடுப்பு முட்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின்போது, மெயின்ட்-கிலீன் துப்புரவுச் சேவை நிறுவனத்துடன் இணைந்து அங் மோ கியோ நகர மன்றம் தயாரித்த ‘லிட்டில் ரெட் பாட்’ எனும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தானியக்கத் துப்புரவு இயந்திரத்தை மூத்த அமைச்சர் லீயும் எம்.பி. நதியாவும் தொடங்கிவைத்தனர்.

உணவு நிலையத்தைச் சுற்றியுள்ள திறந்தவெளிகளில் துப்புரவு ஊழியர்களுடன் இணைந்து இந்த இயந்திரம் இயங்கவுள்ளது. இது பொதுவான பாதைகளில் தானாகவே இயங்கி, சிகரெட் துண்டுகள், போத்தல்கள், கலன்கள், காய்ந்த இலைகள் போன்றவற்றைச் சேகரிக்கும். மழை பெய்யும்போது இது தானாகவே தன் இயங்குதளத்திற்குத் திரும்பிவிடும்.

எந்திரனின் குப்பைத்தொட்டி நிறையும்போது, அது கைப்பேசிச் செயலி வழியாகத் துப்புரவு ஊழியர்களுக்குத் தகவல் அனுப்பும்.

ஏஐ தொழில்நுட்பம், துப்புரவு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து, சேவைகளை மேம்படுத்த உதவும் என்று அங் மோ கியோ நகர மன்றத் தலைவர் ஹென்றி குவெக் தெரிவித்தார்.

முன்னதாக, டெக் கீ சமூக மன்றத்தில் நடைபெற்ற தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுடன் இணைந்து திரு லீ கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்