மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், டிபிஎஸ் வங்கி தனது பேலா! $3 ‘கேஷ்பேக்’ சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 29 முதல் டிசம்பர் 19 வரையிலான 17 சனிக்கிழமைகளில் இச்சலுகை நடைமுறையில் இருக்கும். அக்கம்பக்கக் கடைகள், ஈரச்சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் டிபிஎஸ் பேலா! செயலியைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், நாளொன்றுக்கு அதிகபட்சமாக $3 வரை ‘கேஷ்பேக்’ பெறலாம்.
குறிப்பிட்ட அந்த சனிக்கிழமைகளில் சலுகையைப் பயன்படுத்தும் முதல் 160,000 பேருக்கு இச்சலுகை கிடைக்கும். டிபிஎஸ் வங்கி இத்திட்டத்தை அமல்படுத்துவது இது நான்காவது ஆண்டாகும்.
கடந்த ஆண்டை விட ஐந்து வாரங்கள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், மொத்தம் 2.7 மில்லியன் முறை ‘கேஷ்பேக்’ சலுகைகள் வழங்கப்படும்.
சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில், 2026 தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட $10 மில்லியன் ஆதரவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது செயல்படுகிறது.
அத்தியாவசியச் செலவுகளைக் குறைக்கவும் அக்கம்பக்கத்து வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் இச்சலுகை பெரிதும் உதவுவதாக வங்கியின் பயனீட்டாளர் வங்கிச் சேவைப் பிரிவின் தலைவர் கெல்வின் ஓங் தெரிவித்தார்.
2023ல் தொடக்கப்பட்ட இத்திட்டம், தற்போது மக்கள் அன்றாட உணவு மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கப் பெரிதும் துணைநிற்கிறது.


