தடுப்பூசி எதிர்ப்புக் குழுவை நிறுவிய ஐரிஸ் கோவையும் அவரின் கணவவர் ரேமண்ட் இங்கையும் தொல்லை தருகின்ற வழக்குகளைத் தொடுப்போராக அறிவிக்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (ஏஜிசி) கோரிக்கை விடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இருவரும் புதன்கிழமை (ஜூலை 15) உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்காகச் சென்றனர்.
நியாயமான காரணம் ஏதுமின்றி, வழக்கமாக, விடாமல் தொடர்ந்து மற்றவர்களைத் துன்புறுத்துவதற்காக அல்லது நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாய்ப் பயன்படுத்துவதற்காகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குபவரே ‘தொல்லை தரும் வழக்குத் தொடுப்பவர்’ என்று கூறப்படுகிறார்.
தடுப்பூசிக்கு எதிராகக் குரல்கொடுக்க ‘ஹிலிங் டிவைட்’ எனும் அமைப்பைத் தொடங்கியவர் ஐரிஸ் கோ. தற்போதுள்ள வழக்குகளைத் தொடர்வதற்கு முன்பும் புதிய சிவில் வழக்குகளைத் தொடங்குவதற்கு முன்பும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஏஜிசி மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்தத் தம்பதி மற்றவர்கள்மீது வழக்குத் தொடுப்பதையே உடனடி தீர்வாகக் கருதுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று நீதிபதி ஹூ ஷியாவ் பெங்கிடம் ஏஜிசியின் ஆதரவுக்குழுத் தலைவர் வின்சென்ட் லியோவ் புதன்கிழமை கூறினார்.
“தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணரும் அடுத்த கணமே, வழக்குத் தொடுப்பதுதான் இவர்களின் இயல்பான குணமாக இருக்கிறது,” என்றார் திரு லியோவ்.
இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்குமாறு நீதிபதியை திரு லியோவ் கேட்டுக்கொண்டார்.

