சிங்கப்பூரில் முதல்முறை ரத்ததானம் செய்பவர்களின் வயது வரம்பு 65க்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அது 60ஆக இருந்தது.
இந்தப் புதிய விதிமுறை ஜனவரி 2ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.
சிங்கப்பூரில் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரத்த வங்கியில் போதுமான அளவில் ரத்தம் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த விதிமுறை மாற்றம் கொண்டுவரப்படுவதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 22) தெரிவித்தது.
புதிதாக ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் 66 வயதை எட்டும்வரை ரத்தம் கொடுக்கலாம்.
அதேபோல் ரத்த நன்கொடையாளர்கள் அவர்களது 75 வயது வரை ரத்ததானம் செய்யலாம். விதிமுறைப்படி 76வது பிறந்தநாளை எட்டியபிறகு மூத்தோரால் ரத்ததானம் செய்யமுடியாது.
“சுகாதார அறிவியல் ஆணையத்தின் தரவுகள்படி முதல்முறை ரத்ததானம் செய்யும் மூத்தோருக்கு ரத்ததானம் செய்தபிறகு வரும் சில அறிகுறிகள் மிகக்குறைவு,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுமூலம் அந்தத் தரவுகள் திரட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
“முதல்முறை ரத்ததானம் செய்பவர்களின் வயது வரம்பு 65க்கு மாற்றப்பட்டது சிங்கப்பூரின் ரத்தச் சேமிப்புத் திட்டத்தை விரிவடைய வைக்கும். மேலும் பாதுகாப்பான முறையில் ரத்ததானம் செய்வதால் மூத்தோருக்கு ஆபத்து ஏதும் இருக்காது,” என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் மக்கள்தொகையில் மூத்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நமது ரத்தச் சேமிப்புகளை விரிவுபடுத்த வேண்டும். அதனால் ரத்ததானம் செய்ய உச்சக்கட்டப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். அது ரத்ததானம் செய்பவர்களுக்கும் ரத்தத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கும் பாதுகாப்பைத் தரும்,” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேமண்ட் சுவா கூறினார்.
ரத்ததானம் செய்ய விரும்புபவர்களின் உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த நோயும் அதற்கான அறிகுறிகளும் இருக்கக்கூடாது. அவர்கள் குறைந்தது 45 கிலோகிராம் எடை இருக்க வேண்டும்.
ஆண்களின் ஹீமோகுளோபின் அளவு குறைந்தபட்சம் 13g/dL இருக்க வேண்டும். பெண்களுக்கு அது 12.5g/dL ஆக இருக்க வேண்டும்.
மருத்துவர்களின் அனுமதியின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, நீரிழிவு உள்ளவர்களும் ரத்ததானம் செய்யலாம்.

