உலகில் அதிவேகமாக மூப்படையும் சமூகங்களில் ஒன்றாக மாறுவதற்கான விளிம்பில் சிங்கப்பூர் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருப்பார்.
அத்தகைய போக்கு நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. சுகாதாரக் கட்டமைப்புமீதான பளு அதிகரிக்கும், ஊழியரணி சுருங்கும், குடும்பங்களின் பாரம் கூடும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் மூப்படைதல் என்றால் தளர்ச்சி அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
மூத்தோரால் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும், சமூகப் பந்தங்களை வலுப்படுத்த முடியும், துயரத்திலிருந்து மீண்டுவர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதற்கான சரியான சூழலைச் சமூகம் அமைத்துத் தருவதில்தான் மூத்தோரின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.
ஒருசில மூத்தோர் நாள்பட்ட மறதி, பதற்றம், உளைச்சல் ஆகிய சவால்களை எதிர்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலோர் இளையர்களைவிட இன்னும் உள ரீதியில் வலுவாக இருக்கின்றனர் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலையிடங்கள், சமூகங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் இன்னும் நீக்குப்போக்கான கொள்கைகளைக் கொண்டிருப்பது மூத்தோரின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
மூப்படைதலைப் பின்னடைவாகப் பார்ப்பதைவிட மனித அனுபவங்களின் பன்முகத்தன்மையாகவும் அரவணைப்பு தேவைப்படும் காலக்கட்டத்தில் மூத்தோர் இருக்கின்றனர் என்றும் பார்க்கவேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மூத்தோருடன் நட்புடன் பழகும் திட்டங்கள், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட மனநல சுகாதார ஆதரவும் வாய்ப்புகளும் மூத்தோருக்குப் பக்கபலம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பல அடுக்குப் பராமரிப்புக் கட்டமைப்பு மூத்தோருக்குப் பலவிதங்களில் கைகொடுக்கிறது. கட்டமைப்பின் அடித்தட்டில் மூத்தோரின் மனநலனைப் பாதுகாக்க உதவும் அடித்தள அமைப்புகளின் முயற்சிகளைக் காண முடிகிறது.
அதற்கு அடுத்த படியில் பலதுறை மருந்தகங்கள், பொது மருத்துவமனைகள் ஆகிய அடிப்படைப் பராமரிப்புக் குழுக்கள் செயல்படுகின்றன.
உயர்த் தட்டில் மனநலக் கழகம் போன்ற நிபுணத்துவ நிலையங்கள் மூத்தோருக்கு உதவுகின்றன.

