தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவாக மூப்படையும் மக்கள்தொகை: மேம்படுத்தப்படும் உதவித் திட்டங்கள்

2 mins read
190b0e16-ee30-4b88-a97f-3cda58632236
65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை, முன்பைவிட மிக விரைவாக அதிகரித்து வருவதாக செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. - படம்: த பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவாக மூப்படைந்து வருகிறது.

இந்நிலையில், அவரவர் குடும்பப் பொறுப்புகளையும் கடந்து, பராமரிப்புக்கு இன்னோர் அர்த்தத்தைத் தரும் மேலும் பல மூத்தோர் தேவைப்படுகின்றனர்.

65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை, முன்பைவிட மிக விரைவாக அதிகரித்து வருவதாக செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மக்கள்தொகையில் குறைந்தது 21 விழுக்காட்டினர் 65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030ஆம் ஆண்டில் நான்கில் ஒரு சிங்கப்பூரர் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள பத்தில் எட்டு மூத்தோர் தங்கள் வீடுகளில் மூப்படைய விரும்புவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் மூப்படைதல் தொடர்பான ஆய்வு நிலையத்தின் இயக்குநரான பேராசிரியர் பவுலின் ஸ்டிராகன் தெரிவித்தார்.

இதற்காக வெளிநாடுகளிலிருந்து பணிப்பெண்களை வேலையில் அமர்த்தும் அணுகுமுறையைத் தொடர்வது தீர்வாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட முன்னுரைப்புகளையும் தாண்டி வெளிநாட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கை பேரளவில் அதிகமாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

வெளிநாட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு ஏற்றம் கண்டு ஏறத்தாழ 300,000ஆகப் பதிவாகும் என்று அரசாங்கம் 2012ஆம் ஆண்டில் முன்னுரைத்திருந்தது.

ஆனால், இந்த எண்ணிக்கையைவிட 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதற்கிடையே, சமூக நலனுக்குப் பங்களிக்க மூத்தோர் பலர் முன்வந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டில் தனது மூத்த தலைமுறைத் தூதர்கள் கட்டமைப்பில் 3,000 பேர் இருந்ததாகவும் தற்போதைய நிலவரப்படி அதில் ஏறத்தாழ 9,000 பேர் இருப்பதாகவும் மூத்த தலைமுறையினர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள், சமூகத்தை மையமாகக் கொண்ட வேலை நியமனங்கள் ஆகியவற்றுடனான பங்காளித்துவம் இதைச் சாத்தியமாக்கியுள்ளதாக அது கூறியது.

மூத்த தலைமுறைத் தூதர்கள் வீடுவீடாகச் சென்று மூத்தோரை நலம் விசாரிக்கின்றனர்.

உரிய நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் உதவி, பராமரிப்பு ஆகியவை கிடைப்பதை தூதர்கள் உறுதி செய்கின்றனர்.

குறிப்பாக, சுயமாக நடமாட முடியாதவர்களுக்கும் தனியாக இருக்கும் மூத்தோருக்கும் இது பொருந்தும்.

நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது மட்டுமன்றி, தொலைத்தொடர்பு மூலம் அவர்களுடன் பேசும் முறையையும் மூத்த தலைமுறையினர் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடிய விரைவில் மின்னிலக்கத் தொடர்பு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று மூத்த தலைமுறையினர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் செங் ஹோக் லின் தெரிவித்தார்.

மூத்தோர் நலனுக்கான முயற்சிகளுக்கு வழிகாட்டவும் மூத்தோருக்கான தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ள தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படும்.

மின்னிலக்கத் திறன் கொண்ட மூத்தோருடன் மேலும் சிறந்த முறையில் தொடர்புகொள்ள புதிய அம்சங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதன்மூலம் பல்வேறு விருப்பங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்ட மூத்தோருடன் இணைந்து செயல்பட முடியும்,” என்று டாக்டர் செங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்