சிங்கப்பூர் - மலேசியா இடையே நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்த்து போராடுவதற்கும் தேவையான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கையெழுத்தானது.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயிலும் இந்தப் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திரு சைபுதீன், இம்மாதம் 13,14 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவருடைய பயணத்தின் ஒரு பகுதியாக இந்த உடன்பாடு நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
“இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சிங்கப்பூர் உள்துறைக் குழுக்களுக்கும் மலேசிய சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவை உறுதிப்படுத்துகிறது. மேலும், தகவல் பகிர்வு, பயிற்சி, திறன் மேம்பாடு போன்றவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பும் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தரும் ஆதரவையும் இது வலுப்படுத்துகிறது,” எனச் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு நவம்பர் 16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூரும் மலேசியாவும் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம், இணையக் குற்றம், மோசடிகள், இணையவழி மோசடிகள் போன்ற நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் என அமைச்சு அதில் குறிப்பிட்டது.
இரு நாடுகளின் உள்துறை அமைச்சுகளுக்கு இடையே ஒரு கூட்டுச் செயற்குழு அமைக்கப்படுமெனவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின்கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, பின்பற்ற வேண்டிய கொள்கைகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை இந்தக் குழு கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் என அந்த அறிக்கை விவரித்தது.
குற்ற வழக்குகள், குறிப்பாக மோசடிகள் தொடர்பான குற்றங்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அதிகரித்துள்ளதால் அவற்றைத் தடுக்கும் பொருட்டு இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டின் முற்பாதியில், சிங்கப்பூரில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டன.
மோசடிகள் தொடர்பில் கிட்டத்தட்ட 26,587 சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட $385.6 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்தனர்.
இந்தப் போக்குத் தொடர்ந்தால், இவ்வாண்டு இறுதிக்குள் மோசடிகளால் ஏற்படும் இழப்பு $770 மில்லியனைத் தாண்டும் என அஞ்சப்படுகிறது.