தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒப்பந்தம்

2 mins read
1059442f-be7d-46e9-a957-1cc6ceca9b37
சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை மற்றும் மேபேங்க் சிங்கப்பூர் வங்கிக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (பின் வரிசையில், இடமிருந்து) சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை தலைவர் கோ சூன் கெங், வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், மேபேங்க் சிங்கப்பூர் வங்கியின் உலகளாவிய தலைவர் சோங் வீ யீட் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். - படம்: சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தைக் கருத்தில் கொண்டு, எல்லை தாண்டிய ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தத்தின்கீழ், சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்கள், பயிலரங்குகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை விரைவாகத் திறக்கலாம். மேலும் இத்திட்டத்தின் மூலம் பல அமைப்புகள் பயனடையலாம்.

மலேசியாவின் சொத்துகளின் அடிப்படையில் மிகப்பெரிய கடன் வழங்குநரான மேபேங்கிற்கும், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபைக்கும் இடையே ஜூலை 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், தென்கிழக்காசியா முழுவதும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் வகை செய்கிறது.

2030ஆம் ஆண்டுக்குள் இந்த வட்டாரம் உலகின் நான்காவது பெரிய பொருளியலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$5.8 டிரில்லியன்) ஆகும்.

சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபை, மேபேங்க் வங்கி ஆகியவை ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை மையமாகக் கொண்டு மேம்பாடு, முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகக் கூட்டங்கள், பயிலரங்குகள், தொடர்பு கட்டமைப்புகளை நடத்தப்போவதாகக் கூறின.

கணக்குகளை விரைவாகப் பதிவு செய்வது உட்பட, வர்த்தகங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை மேபேங்க் வழங்கும். நிலைத்தன்மை, ஷரியா சட்டத்துக்கு இணக்கமான முதலீடுகள் போன்ற திட்டங்களையும் இது ஆதரிக்கும்.

“இந்த ஒத்துழைப்பு, சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கான நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புதிய வட்டார மேம்பாட்டு நிலப்பரப்பில் இரு தரப்பினருக்கும் இடையேயான மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பையும் குறிக்கிறது,” என்று மேபேங்க் சிங்கப்பூரின் உலகளாவிய வங்கித் தலைவர் சோங் வீ யீட் கூறினார்.

5,000 பெருநிறுவன உறுப்பினர்களையும் 150க்கும் மேற்பட்ட வர்த்தகச் சங்க உறுப்பினர்களையும் கொண்ட சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபையின் தலைவர் கோ சூன் கெங், “இந்த ஒப்பந்தம் வர்த்தகங்கள் அனைத்துலகச் சந்தைகளில் நம்பிக்கையுடனும் செயல்திறனுடனும் விரிவடைய உதவும்,” என்றார்.

ஹில் ஸ்திரீட்டில் உள்ள சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழிற்சபையின் கட்டடத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதை நேரில் பார்வையிட்ட வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், நிச்சயமற்ற வெளிப்புறச் சூழலைக் கையாளும் வர்த்தகங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்