லிம் சூ காங் வட்டாரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்கள் எதிர்காலத்தில் தற்காப்புப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படவுள்ளன. அதே வேளையில், பிற பண்ணைகளுக்கு அருகில் வடக்குப் பகுதியில் இருக்கும் ராணுவ நிலங்கள் எதிர்கால விவசாயப் பயன்பாட்டுக்காக மாற்றியமைக்கப்படவுள்ளன.
இப்பகுதியின் வடக்கில் விவசாய நிலங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ‘லிம் சூ காங் பெருந்திட்டம்’ எனப்படும் அதிநவீன வேளாண்-உணவு மையத்தின் மேம்பாட்டை விரைவுபடுத்த முடியும்.
2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதத்தைச் சந்தித்தது. இந்த நிலப் பயன்பாட்டு மாற்றங்களைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு, தற்காப்பு அமைச்சு, தேசியப் பூங்காக் கழகம், சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியவை திங்கட்கிழமையன்று (மே 25) கூட்டாக அறிவித்தன.
தெற்குப் பகுதியில் பாதிக்கப்படும் பண்ணைகள், அவற்றின் குத்தகைக்காலம் முடியும் வரை, அதாவது 2030களின் நடுப்பகுதி வரை அங்கேயே தொடர்ந்து செயல்படலாம்.
குத்தகைக்காலம் முடிவடைந்ததும் அந்த நிலங்கள் ராணுவப் பயன்பாட்டுக்காகத் திருப்பி ஒப்படைக்கப்படும்.
செங் சூன் பண்ணை, பாலிவுட் ஃபார்ம்ஸ் பண்ணை, கான் மீன் அக்குவேரியம், கேலப் கிராஞ்சி ஃபார்ம் ரிசார்ட் மற்றும் மலேசியன் ஃபீட்மில்ஸ் பண்ணை ஆகிய ஐந்து பண்ணைகள் தற்போது இத்தெற்குப் பகுதி நிலங்களில் செயல்பட்டு வருகின்றன. குத்தகைக்காலம் முன்கூட்டியே ரத்து செய்யப்படாது என்று அரசாங்க முகவைகள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பண்ணைகள் தொடர்ந்து செயல்பட விரும்பினால், வடக்குப் பகுதி நிலங்களுக்கு ஏலம் எடுக்க வேண்டும். அவர்களுக்கு அங்கு நிலம் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. பாலிவுட் ஃபார்ம்ஸ் மற்றும் கான் மீன் அக்குவேரியம் குத்தகை டிசம்பர் 2026ஆம் ஆண்டிலும், கேலப் கிராஞ்சி ஃபார்ம் ரிசார்ட்டின் குத்தகை மார்ச் 2027ஆம் ஆண்டிலும் முடிவடைகின்றன. இவற்றுக்கு மேல் குத்தகை நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று 2020ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது.
நாட்டின் மூன்று முட்டைப் பண்ணைகளில் ஒன்றான செங் சூன் மற்றும் மலேசியன் ஃபீட்மில்ஸ் பண்ணைகளின் குத்தகை முறையே 2036, 2037ஆம் ஆண்டுகளில் முடிவடைகின்றன. அவற்றுக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் முன்னதாகவே இதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் முட்டை உற்பத்தியைப் பாதுகாக்கவும், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் செங் சூன் பண்ணையுடன் சிங்கப்பூர் உணவு அமைப்பு இணைந்து செயல்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பெருந்திட்டத்தின்கீழ் புதிய பரிந்துரைகளைச் சோதித்துப் பார்க்க, ஒரே கூரையின்கீழ் பல வகையான பண்ணைகள் இணைந்து செயல்பட்டு, வளங்களைப் பகிர்ந்து உற்பத்திச் செலவைக் குறைக்கும் ‘பல குத்தகைதாரர்களுக்கான வசதி’ குறித்த தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.

