தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களும் ‘ஏஐ’யும் சிங்கப்பூரை உலக உற்பத்தி மையமாக மேம்படுத்த இயலும்: ஆல்வின் டான்

1 mins read
1e278d69-ff1c-40a1-9840-4bfdb1ad14be
சிங்கப்பூர் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவர் லென்னான் டான் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் திறனும் இங்குள்ள ஊழியர்களும் இணைந்து சிங்கப்பூரை உலக உற்பத்தி மையமாக மேம்படுத்த இயலும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்து உள்ளார்.

இருப்பினும், சிங்கப்பூர் அதன் ஊழியரணியின் ஆற்றலையும் செயற்கை நுண்ணறிவுத் திறனையும் ஒருங்கிணைப்பதில் சமநிலை பேண வேண்டியது அவசியம் என்றார் அவர்.

அவ்வாறு செய்யும்போது வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு நவீன உற்பத்திக்கான உலக நடுவமாக சிங்கப்பூரின் நிலை மேம்படும் என்றும் திரு டான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் வருடாந்திர மாநாட்டில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

“இயந்திரத் துல்லியம், தானியக்கம் ஆகியவற்றுக்கு அப்பால் மனிதத் திறன்களே புத்தாக்கத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. படைப்புத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணுதல், பகுத்தறிவு போன்ற தனித்துவமான மனிதப் பண்புகள் உற்பத்தித் துறையை செழிப்படையச் செய்யும்.

“செயற்கை நுண்ணறிவு என்பது மிக மிக அத்தியாவசியமான மனிதத் திறன்களுக்கு மாற்றாக ஒருபோதும் அமைந்துவிடாது.

“மனிதத் திறன்களுக்கு மாற்று தானியக்கம் என்பதற்குப் பதிலாக, உற்பத்திச் செயல்பாட்டின் மதிப்புமிக்க பங்காளிகளாக ஊழியர்கள் உருவெடுக்க முடியும் என்பதே உண்மை,” என்றார் கலாசார, சமூக, விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான திரு டான்.

வருங்கால உற்பத்தித் துறை மனிதர்களும் இயந்திரங்களும் ஒன்றிணைந்து இயக்கப்படுவதைக் கற்பனை செய்து பார்க்குமாறு மாநாட்டில் பங்கேற்ற தொழில்துறையினரை அவர் கேட்டுக்கொண்டார். அந்த மாநாட்டில் ஏறத்தாழ 1,500 பேர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்